Breaking News

தீபாவளியன்று போலீஸ் இன்ஸ்பெக்டரால் கொதித்த ரஜினி...! - என்ன நடந்தது?

தீபாவளி தினத்தன்று காலை ரஜனி, தனது வீட்டுக்கு வரும் ரசிகர்களிடம் தீபாவளி வாழ்த்து சொல்லுவார். அதேபோல், இந்த வருடமும் ரஜினி வீட்டு வாசலில் ரசிகர்கள் திரண்டு நின்றனர். இதைக் கேள்விப்பட்ட ரஜினி, வேட்டி, சட்டை சகிதம் வெளியே வருவதற்கு கிளம்பிக்கொண்டிருந்த சமயம், சமூக வலைதளங்களில் பரவிய ஒரு வீடியோவைப் பார்த்து திடுக்கிட்டார்.

ரஜினி

போயஸ்கார்டன் தெருமுனையில் நின்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அங்கே கூடியிருந்த ரசிகர்களிடம், `உங்களையெல்லாம் சந்திக்க ரஜினிக்கு விருப்பம் இல்லை. வாழ்த்துக்களை மட்டும் சொல்லச் சொன்னாராம் ரஜினி. கலைஞ்சு போயிடுங்க' என்று சொல்லுவது போன்ற வீடியோ அது. `யார் அந்த போலீஸ் அதிகாரிக்குத் தவறான தகவலை சொன்னது? அல்லது அவரே பொய் சொல்கிறாரா?' என்று கேட்டபடி, உடனே வாசலுக்கு வந்துவிட்டார் ரஜினி. கூடியிருந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துச் சொல்லிவிட்டு உள்ளே போனார்.

Also Read: அரசியல் கட்சி இப்போதைக்கு இல்லை; ஊழலை ஒழிக்க சட்ட ஃபார்முலா! - ரஜினி கையில் எடுக்கும் புது அஸ்திரம்

அண்மையில் பி.ஜே.பி-யின் முக்கிய பிரமுகரான ஆடிட்டர் குருமூர்த்தி ரஜினியைச் சந்தித்தார். அப்போது அமித்ஷாவை சந்திக்க ரஜினியை அவர் அழைத்தார். கடந்த வருடம் நவம்பரில் மீடியாவில் பேசியபோது,`எனக்கு காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. அது நிறைவேறாது' பி.ஜே.பி-க்கு எதிராகத் தான் பேசியதை நினைவுப்படுத்திய ரஜினி, குருமூர்த்தியின் அழைப்பை அப்போதே மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், அமித்ஷாவை ரஜினி சந்திக்கப்போகிறார். கொரோனா சீசன் என்பதால், காணொலி வாயிலாகப் பேசுவார்... போனில் அமித்ஷாவுடன் பேசுவார்.. என்றெல்லாம் சிலர் கிளப்பிவிட்டனர். அதேபோல், ரஜினி சந்திக்கவில்லை என்றதும், `அவருக்குக் காய்ச்சல்; கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ரெஸ்ட்டில் இருக்கிறார்’ என்றும் வேறு ஒரு தகவல் பரவியது. இதையும் ரஜினி தரப்பினர் மறுத்தனர்.``இதுமாதிரி தவறான தகவலைப் பரப்பியவர்கள் யாரென்று ரஜினிக்கும் தெரியும். எங்களைப் பொறுமையாக இருக்கச் சொல்லியிருக்கிறார். அதனால், சம்மந்தப்பட்டவர்கள் மீது ரியாக்ஷன் காட்டாமல் இருக்கிறோம்’’ என்று ரஜினி மன்றத்தினர் கோபமாகச் சொல்கிறார்கள்.

ரஜினி

வருகிற டிசம்பர் 12-ம் தேதியன்று ரஜினியின் பிறந்தநாள் வருகிறது. இதற்கு முந்தைய வருடங்களில், ரசிகர்களைப் பிறந்தநாள் கொண்டாட வேண்டாம் என்று சொன்ன ரஜினி, இந்தமுறை ரசிகர்கள் விருப்பப்படி கொண்டாடட்டும் என்று சொல்லிவிட்டாராம். இந்தத் தகவல் ரசிகர் மன்றத்தினர் மத்தியில் தீயாகப் பரவி வருகிறது. அதேபோல், பிறந்தநாள் முடிந்த பத்து நாள்களில் ரஜினி, அவரது மன்ற முக்கிய நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்துப் பேச இருக்கிறார். அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்றுதான் அவரது ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கிறது.

`` 234 தொகுதிகளிலும் எங்கள் தலைவரின் புதிய கட்சி சின்னத்தின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட இருக்கிறார்கள். ஒரு சில அரசியல் கட்சியினர்கூட கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களையும் கட்சி சின்னத்திலேயே போட்டியிடவைக்கத் தலைவர் நினைக்கிறார். அதுதொடர்பான பேச்சுவார்த்தை நடக்கிறது'' என்று ரசிகர்மன்ற நிர்வாகி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.



from Latest News

No comments