Breaking News

நிவர் புயல்: `கஜா போன்ற பாதிப்பு இருக்காது; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்!’ ஆர்.பி உதயகுமார்

சென்னையிலிருந்து 590 கி.மீ தூரத்திலும் புதுச்சேரியிலிருந்து 590 கி.மீ தூரத்திலும் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அதி தீவிரப் புயலாக நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 25 கி.மீ வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசிய பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார், ``வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இன்று அதிகாலை 2.30 மணிக்கு வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெறும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தற்போது 740 கி.மீ. தொலைவில் உள்ள நிவர் புயல், கரையைக் கடக்கும் போது மணிக்கு 80 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மிகக் கனமழை, அதி கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. கடலூர், அரக்கோணத்துக்கு ஆறு தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் விரைந்துள்ளனர்.

கொந்தளிப்புடன் காணப்படும் புதுச்சேரி கடல்

கனமழை, புயல் காற்றை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீன்வளத் துறை மூலம் மீனவர்களுக்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஏரிகளைக் கண்காணிக்கவும், கண்மாய்களில் அடைப்பில்லை என்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதி, பாதுகாப்பற்ற பகுதி, பழைய கட்டிடங்களில் வசிப்போர் உடனடியாக அரசு முகாம்களுக்கு வரவேண்டும். நீர்நிலைகளுக்கு அருகே குழந்தைகளை அனுப்பவேண்டாம்; பொதுமக்களும் யாரும் செல்லவேண்டாம். மக்கள் அத்தியாவசியமான பொருட்களைக் கையிருப்பு வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் புயல், கஜா புயல் போன்ற பாதிப்பை ஏற்படுத்தாது என்ற தகவல் கிடைத்துள்ளது. அரசு தயார்நிலையில் இருக்கிறது. மக்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்" எனக் கூறினார்.

Also Read: `அதி தீவிரப் புயலாக மாறும் நிவர்!’ - 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு #Nivar #LiveUpdates

மின்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பேசிய மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, ``புயல் பாதிப்புகளை எதிர்க்கொள்ள மின்சாரவாரியம் தயார் நிலையில் உள்ளது. எந்த இடத்தில் அதிக பாதிப்பு ஏற்படுகிறதோ, அங்குத் தேவையான ஆட்களை அனுப்ப, பொருட்களை அனுப்ப வாகனங்கள் தயார் நிலையில் இருக்கிறது. புயல் கரையைக் கடக்கும் சமயத்தில், மக்களின் பாதுகாப்புக்காக மின்சாரம் நிறுத்தப்படும். மக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். இந்த வருடம் மட்டும் 60,000 மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. கஜா புயலின்போது அனைவரும் பாராட்டும்படி பணிகளை மேற்கொண்டதைவிடச் சிறப்பாகச் செயலாற்றத் தயார்நிலையில் இருக்கிறோம். மின்கம்பங்கள் சேதமடைந்தாலும், உடனடியாக நிலைமையைச் சமாளிக்கத் தயார் நிலையில் இருக்கிறோம்" என்று கூறினார்.

நிவர் புயல்

இந்தநிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள், அரசு தலைமைச் செயலர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், புயலுக்கு அரசு தரப்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், புயல் அதிகம் பாதிக்கக் கூடிய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் போன்ற பெரும் சேதம் இந்த முறை நடந்துவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்தவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.



from Latest News

No comments