Breaking News

திருச்செந்தூர்: பக்தர்கள் பங்கேற்பின்றி நாளை நடக்கும் சூரசம்ஹாரம்; ஏற்பாடுகள் தீவிரம்!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழாவும் ஒன்று. இந்தாண்டு சஷ்டி விழா, கடந்த 15-ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தினமும் காலையில் யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி, யாக வேள்வி நடந்து வருகிறது.

கடற்கரை முகப்புப்பகுதி சம்படுத்துதல் பணி

மகா தீபாராதனைக்குப் பிறகு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம், மூலவர் சுப்பிரமணியருக்கு உச்சிகால தீபாராதனை பின்னர், யாகசாலையில் மகா தீபாராதனையும் நடந்து வருகிறது. இந்த நாட்களில் தினமும் சுவாமி ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளுவதும் நடந்து வருகிறது. இந்தாண்டு தங்கதேர் பவனி ரத்து செய்யப்பட்டது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (20-ம் தேதி) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

வழக்கமாக சூரசம்ஹார நிகழ்வைக்காண தமிழகத்தின் பல மாவட்டங்கள் மட்டுமில்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துவிடுவார்கள். இந்தாண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயில் வளாகத்தில் பக்தர்கள் விரதமிருக்க அனுமதி வழங்கப்படவில்லை.

சூரசம்ஹாரம்

நாளை நடைபெறும் சூரசம்ஹார விழாவிலும், 21-ம் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக கோயில் கடற்கரையில் நடக்கும் சூரசம்ஹாரம், இந்தாண்டு கடற்கரை நுழைவு வாயில் முகப்பு பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் கோயிலுக்கு பக்தர்கள் வருவதை தடுக்க 15 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் நகர்ப் பகுதியில் 7 இடங்களிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கடற்கரை நுழைவு பகுதியில் ஜே.சி.பி மூலம் கடற்கரை மணல் சமன்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கும் இடத்தைச் சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கபட்டுள்ளன. 2 ஆயிரம் போலீஸார் திருச்செந்தூர் நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுப்படுத்தப் பட்டுள்ளனர்.

பக்தர்களின்றி வெறிச்சோடிக் காணப்படும் கடற்கரை

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி ஆகியோர் செய்துள்ளனர். சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சப்பரம் தூக்கும் சீர்பாத பணியாளர்கள், திருக்கோயில் போத்திகள், பட்டர்கள், திரிசுதந்திரர்கள், கோயில் பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதல் முறையாக பக்தர்கள் பங்கேற்பின்றி திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளது.



from Latest News

No comments