Breaking News

Doctor Vikatan: ஒருக்களித்துப் படுத்து தூங்குவதால் முக அமைப்பு மாறுமா?

என்னுடைய முகத்தில் இட, வலப் பக்கங்களை ஒப்பிடுகையில் லேசான வித்தியாசம் தெரிகிறது. ஒரு பக்க சருமத்தில் மட்டும் கோடுகளும் சுருக்கங்களும் தெரிவதைப் பார்க்கிறேன். தூங்கும் முறைதான் காரணம் என்கிறாள் என் தோழி. ஒருக்களித்துப் படுத்துத் தூங்குவதால் இப்படி ஏற்படுமா? இதை நிரந்தரமாக சரிசெய்ய ஏதேனும் தீர்வுகள் உள்ளனவா?

face shape

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

``நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். ஒரு பக்கமாகத் திரும்பி தூங்கும்போது, அந்தப் பக்கத்தில் ஏற்படும் அழுத்தம் காரணமாக வாய்ப்பகுதியில் உள்ள கோடுகளும் சுருக்கங்களும் ஆழமாகும்.

மல்லாக்கப் படுத்து உறங்குவதுதான் சரியானது. அந்த நிலையில்தான் உங்கள் முகம் தலையணையில் அழுந்தாது. ஒருக்களித்துப் படுத்தே தூங்கிப் பழகியவர்களின் முகத்தில் மூக்குக்கும் வாய்க்கும் இடையிலான பகுதியில் சுருக்கங்கள் இருப்பதைப் பார்க்கலாம்.

செல்வி ராஜேந்திரன்

எல்லோருடைய முக அமைப்பும் செதுக்கி வைத்தது போல ஒரே மாதிரி இருக்காது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பக்கத்துக்கும் இன்னொரு பக்கத்துக்கும் இடையில் லேசான வித்தியாசம் இருப்பது இயல்புதான்.

அது உங்களை ரொம்பவும் உறுத்தினாலோ, கவலை அளித்தாலோ, சரும மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். ஃபில்லர்ஸ் மற்றும் போடாக்ஸ் சிகிச்சையின் உதவியால் அந்தப் பிரச்னை சரி செய்யப்படும். சருமத்தின் கோடுகளும் சுருக்கங்களும் இந்தச் சிகிச்சைகளின் மூலம் சரி செய்யப்படும்.

எப்படித் தூங்குகிறீர்கள் என்பதைப் போலவே, சரியான நேரத்துக்குத் தூங்குவதும், சரும ஆரோக்கியத்துக்கு மிக முக்கியம்.

இரவில் 10 மணிக்குத் தூங்கிவிடுவதுதான் சிறந்தது. அந்த நேரத்தில்தான், அதாவது இருட்டில்தான் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்கும். நமது சருமம், கூந்தல், உடல் என எல்லாவற்றிலும் ஏற்படும் பழுதுகளை நீக்கி, ஆரோக்கியமாக வைக்கும் தன்மை கொண்டது மெலட்டோனின் ஹார்மோன்.

தவிர ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கைக்கும் ஆரோக்கியமான சருமத்துக்கும் இந்த ஹார்மோன் அவசியம். 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டியதும் அவசியம்.

மெலட்டோனின் சபளிமென்ட்டுகளும் இப்போது கிடைக்கின்றன. இவை தூக்கத்துக்கான சப்ளிமென்ட்டுகள் அல்ல. ஆழ்ந்த உறக்கம் இல்லாதவர்களுக்கும், ஜெட் லாக் எனப்படும் பயணத்துக்குப் பிறகான தூக்க பிரச்னையால் பாதிக்கப்படுவோருக்குமானது.

Representational Image

நீங்கள் தூங்கும்போது உபயோகிக்கும் தலையணை உறைகளும்கூட கவனிக்கப்பட வேண்டும். உதாரணத்துக்கு நீங்கள் காட்டன் தலையணை உறை பயன்படுத்தும் பட்சத்தில் அது உங்கள் சருமத்தில் இருந்து வெளியேறும் எண்ணெய்ப்பசை, அழுக்கு, வியர்வை போன்றவற்றை கிரகித்துக் கொள்ளும். அதனால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு முகத்தில் பருக்கள் வரலாம். கூந்தல் ஆரோக்கியத்தையும் இது பாதிக்கலாம்.

அதுவே, நீங்கள் சாட்டின் அல்லது சில்க் துணியாலான தலையணை உறை பயன்படுத்தினால், சருமத்தில் ஏற்படும் உராய்வு பெருமளவில் குறையும். அதனால் சருமமும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News

No comments