Breaking News

#NFT என்றால் என்ன? | ஸ்மார்ட் கான்ட்ராக்ட்ஸ் | பகுதி 2

நீங்கள் வைத்திருக்கும் பணத்துக்கு எவ்வாறு மதிப்பு வந்தது? என்றாவது யோசித்ததுண்டா? அது வெறும் காட்டன், லினென் கலந்த பேப்பர்தானே? ஆனால் அதை ஏன் அய்யாசாமி முதல் அம்பானி வரை மதிக்கிறார்கள்?

(நீங்கள் இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தை படிக்கவில்லை என்றால் படித்துவிட்டு தொடரவும்…)

உங்கள் பர்ஸிலிருந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுங்கள். அதன் முன் பக்கம், 'I PROMISE TO PAY THE BEARER THE SUM OF __ RUPEES' என்று அச்சிட்டு கீழே ரிசர்வ் வங்கி கவர்னரின் புரியாத கையொப்பம் இருக்கும்.

ரூபாய் நோட்டு என்பது வெறும் பேப்பர் அல்ல, அதுவொரு பத்திரம். 'இந்தப் பத்திரத்தை வைத்துள்ள நபருக்கு நான் [குறிப்பிட்ட] ரூபாயைத் தருமாறு வாக்குறுதி அளிக்கிறேன்' என்கிறார் RBI கவர்னர். அவரின் வாக்குதான் பேப்பருக்கு பணம் எனும் அந்தஸ்தைத் தருகிறது!

விக்னேஷ் சுந்தரேசன் கோடியைக் கொட்டி வாங்கியுள்ளது, பீப்பிள் வரைந்த டிஜிட்டல் ஓவியம் எனும் .jpg ஃபைலை அல்ல, அதனை யார் வரைந்தது, யார் விற்றது, யார் வாங்கியது என்று முழு விவரங்கள் அடங்கிய, டிஜிட்டல் வடிவிலான ஒரு பத்திரத்தை!

சரி, பணத்தின் மேலேயே கவர்னரின் கையொப்பம் இருக்கிறது. பீப்பிளின் கையொப்பம் அந்த இமேஜ்-ன் மீது இல்லையே என்று சிலர் நினைக்கலாம். தயவு செய்து நினையுங்கள், ஏனெனில் ஸ்மார்ட் கான்ட்ராக்ட் (Smart Contract) பற்றி இனி பார்க்கப்போகிறோம்.

ஸ்மார்ட் கான்ட்ராக்ட்ஸ்...

(ஸ்மார்ட் - புத்திசாலித்தனமான, கான்ட்ராக்ட் - ஒப்பந்தம்; ஸ்மார்ட் கான்ட்ராக்ட் - புத்திசாலித்தனமான ஒப்பந்தம்.)

கமலுக்கும் ரஜினிக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் (பெயர்கள் மட்டும்தான், நடிகர்கள் அல்ல!)

கமல் சொல்லும் வேலையை ரஜினி சொன்ன நேரத்துக்குள் செய்து முடித்துவிட்டால், தாங்கள் இருவரும் கலந்து பேசியபடி கமல் ஒரு தொகையை ரஜினிக்கு வழங்கிவிடுவார்.

இதனை உறுதி செய்யும் வகையில் இருவரும் தங்களின் ஒப்பந்தம் எத்தகையது என்று ஒரு பாண்டு பத்திரத்தில் பட்டியலிட்டு, இறுதியாக இந்த ஒப்பந்தத்துக்கு இருவரும் கட்டுப்படுகிறோம் என்று கையொப்பமும் போட்டுவிடுகின்றனர். இப்போது சுடச்சுட அதிகாரப்பூர்வமான ஓர் ஒப்பந்தம் ரெடி.

சொன்ன நேரத்துக்கு ரஜினி வேலையை முடிக்கவில்லை என்றால் ஒப்பந்தப்படி கமல் அவருக்கு காசு தர தேவையில்லை. வேலையை முடிக்காமலே கமலிடம் காசு கேட்டால் அவர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதேசமயம் ரஜினி வேலையை முடித்துவிட, கமல் அவருக்கு பணம் தர முடியாது என்று கூறினால், ரஜினி இப்போது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். இருவருக்கும் உதவ சட்டம் இருக்கிறது என்பது ஒப்பந்தங்களின் மிக முக்கிய சாதகம். ஆனால் ஒப்பந்தங்களில் பாதகங்களும் இருக்கவே செய்கின்றன.

கமலோ ரஜினியோ, கோர்ட்டில் கேஸ் போட்டால் தீர்ப்பு வர எவ்வளவு நாள் ஆகும் என்பது தெரியாது. இருவரில் ஒருவர் தலைமறைவானால், அவரைத் தேடிக் கண்டுபிடிக்க போலீசுக்கு அவகாசம் தேவைப்படும். (விஜய் மல்லையா போல கண் முன்னே இருந்துகொண்டும் பிடிபடாமல் இருக்க முடியும்!)

கமலோ ரஜினியோ பணம் படைத்தவர்கள் என்றால் சட்டத்தை வளைக்கும் காரியங்களைச் செய்ய முடியும். மூன்றாவது மனிதரிடம் இந்த ஒப்பந்தம் கொடுத்து வைக்கப்பட்டிருந்தால், அதனை கமலோ ரஜினியோ தங்களின் சக்தியைப் பயன்படுத்தி, தங்களுக்கு ஏற்றார்போல மாற்றி எழுத முடியும் (இதுதான் பத்திர மோசடி). ஷப்பாடா, இப்படி பல பிரச்னைகள் உள்ளன!

இதையெல்லாம் தடுக்கும் வகையில் ஓர் மாயாஜால ஒப்பந்தப் பத்திரத்தை தயார் செய்யப் போகிறோம். நீங்கள் படித்தது சரிதான் - மாயாஜாலம்! இந்த மாயப் பத்திரத்தின் சிறப்புகள் என்னென்ன?

  • ஒருமுறை எழுதிவிட்டால் யாராலும் மாற்றி அமைக்க முடியாது.

  • வேலை முடிந்தவுடன், மந்திரம் போட்டது போல கமலின் கையில் இருந்து ரஜினிக்கு தானே பணம் வந்து சேரும்.

  • அந்த ஒப்பந்தத்தை சரிபார்க்க ஒருவர் இருவரல்ல, ஓராயிரம் பேர் இருப்பார்கள். இதனால் ஒப்பந்தப்படி பணம் பரிமாறுவதில் எந்தவித சிக்கலும் இருக்காது!

  • மாயஜால ‘தானியங்கி’ ஒப்பந்தம் என்பதால் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நேரம் மிச்சம்!

இந்த மாயாஜால ஒப்பந்தத்துக்குப் பெயர்தான் ‘ஸ்மார்ட் கான்ட்ராக்ட்’. இது நடைமுறையில் சாத்தியமா என்றால், யோசிக்காமல் சொல்லலாம் - சாத்தியம்! ஆயிரமாயிரம் ஸ்மார்ட் கான்ட்ராக்டுகள் தினசரி போடப்பட்டு, அவற்றின் வேலைகள் செவ்வனே நிறைவேற்றப்பட்டும் வருகின்றன. ஆனால் இதற்கு மாயாஜாலம் எல்லாம் தேவையில்லை, கொஞ்சம் ‘விசேஷமான கம்ப்யூட்டர் கோடிங்’ தெரிந்திருந்தால் போதும்!

ஸ்மா. கா - செயல்படும் விதம்…

எந்திரன் படத்தில், சிட்டிக்கு வசீகரன் சில வேலைகளை கொடுக்கிறார். ஒரு டாஸ்க் முடிந்ததும், சிட்டி தானே மற்றொரு டாஸ்க்கை செய்ய ஆரம்பித்துவிடும். சிட்டி ஓர் அறிவாளி ரோபோ என்பதால் தானே யோசித்து இதனைச் செய்கிறது. ஆனால் உங்களின் கம்ப்யூட்டருக்கு எப்படி டாஸ்க் கொடுப்பது?

ஸ்மார்ட் கான்ட்ராக்ட் ஃபைலில், சில வரிகள் கோடிங் எழுதி, ‘இதை இதை இந்தந்த நேரத்தில் செயல்படுத்து’ என்று கூறிவிட்டால் போதும், உங்கள் கம்ப்யூட்டர் சொன்ன நேரத்துக்கு உங்களின் கட்டளைகளை நிறைவேற்றி விடும். எனவே, ஸ்மார்ட் கான்ட்ராக்ட் என்பது கட்டளைகளை நிறைவேற்றும் ஒரு கம்ப்யூட்டர் ஃபைல் என்று வைத்துக்கொள்ளலாம்.

ஸ்மார்ட் கான்ட்ராக்ட் - ஒரு சாதாரண டிஜிட்டல் ஃபைலை NFT-யாக மாற்றிவிடுகிறது!

NFT ஒவ்வொன்றுக்குப் பின்னரும் ஒரு ஸ்மார்ட் கான்ட்ராக்ட் இருக்கிறது. உதாரணமாக, ஏ.ஆர். ரஹ்மான் ‘ஊர்வசி ஊர்வசி’ பாடலை NFT-யாக மாற்றி உங்களுக்கு விற்கிறார். ரஹ்மான் மற்றும் உங்களுடைய சுய விவரங்கள், உங்களுக்கு இடையே நடந்த பணப்பரிவர்த்தனையின் விவரம், அந்த NFT-யுடன் தொடர்புடைய பிற ஒப்பந்ததாரர்கள், NFT-யாக அறிவிக்கப்பட்ட அந்த டிஜிட்டல் ஒலிக்கோப்பு (audio file)-ன் URL லிங்க் எல்லாம் அந்த ஸ்மார்ட் கான்ட்ராக்ட்டில் நிரந்தரமாக பதிவாகி இருக்கும். ஆம், நிரந்தரமாக! தவறுதலாக ‘டெலீட்’ பட்டனைத் தொட்டெல்லாம் இந்த ஸ்மார்ட் கான்டராக்டை அழிக்க முடியாது. காரணம் பிளாக்செயின் (Blockchain) தொழில்நுட்பம்! பிளாக்செயினில் ஒரு தகவலை பதிவிடுவது என்பது தஞ்சை பெரிய கோவில் போல அப்படியே நிலைத்திருக்கும். அதுதான் அந்த தொழில்நுட்பத்தின் ஆச்சர்யம்! (பிளாக்செயின் பற்றி விளக்கமாக வரும் பதிவுகளில் பார்ப்போம்.)

NFT - ஓர் எளிய ரீகேப்…

  • NFT என்பது ஒருவகை டிஜிட்டல் சொத்து. அதை நீங்கள் வாங்கலாம், விற்கலாம்.

  • NFT என்பது டிஜிட்டல் ஓவியம், புகைப்படம், பாடல் ஒலிக்கோப்பு, வீடியோ, என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்!

  • NFT என்பது தனித்துவம் வாய்ந்தது. எனவே, அதை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

  • NFT-யை பிரதி எடுக்க முடியாது. காரணம், அதனை வாங்கி விற்கும் நபர்களின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கையொப்பம் ‘ஸ்மார்ட் கான்ட்ராக்ட்’ ஆக NFT-யில் சேமிக்கப்படுகிறது.

  • பாதுகாப்புகள் அதிகம் அடங்கிய பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் ஸ்மார்ட் கான்ட்ராக்ட்ஸ் உருவாக்கப்படுவதால், அவற்றை எந்தக் காலத்திலும் மாற்ற முடியாது!

நீங்கள் எந்த விஷயத்தை NFT-யாக வாங்கி வைத்துக்கொள்ள ஆசைப்படுவீர்கள்? இல்லையென்றால் நீங்கள் பொக்கிஷமாக நினைக்கும் எந்த விஷயத்தை NFT-யாக மாற்றுவீர்கள்? மேலும் ஸ்மார்ட் கான்ட்ராக்டில் என்னென்ன நிறை குறைகள் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? கமென்ட்டுங்களேன்!

கூடவே, NFT பற்றி ஜாலியான இந்தக் குவிஸ்-ஸில் கலந்துகொண்டு உங்களின் ஸ்கோர் என்ன என்று கண்டுபிடியுங்கள்!



from Latest News

No comments