Breaking News

காவலன் செயலியில் புகார்; 9 நிமிடத்தில் ஸ்பாட்டில் போலீஸ்! - குமரி எஸ்.பி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 5 மாதங்களில் பொதுமக்களால் தொலைக்கப்பட்ட 62 செல்போன்கள் காவல்துறையால் மீட்டெடுக்கப்பட்டது. அந்த மொபைல் போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. இதில் தொலைக்கப்பட்ட செல்போன்களை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உரியவர்களிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பத்ரி நாராயணன், "கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டரை மாதங்களில் 25 கஞ்சா தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தொடர்புடைய 45 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து கொலை கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 25 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் கஞ்சா வியாபாரிகள் மூன்று பேர், ஐந்து ரவுடிகள் என எட்டு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மொபைல் போன்களை வழங்கும் எஸ்.பி பத்ரி நாராயணன்

கடந்த ஐந்து மாதங்களில் பொதுமக்களால் தொலைக்கப்பட்ட 62 செல்போன்கள் மீட்டெடுக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இரவு ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது தொடர்பு எண்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை முகநூல் பக்கம் வழியாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இரவு நேரம் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் அவசர எண் 100 மற்றும் முகநூலில் வெளியிடப்படும் காவல் அலுவலர்களின் தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் குற்ற சம்பவங்களை மேலும் தடுக்க முடியும். தற்போது காவலன் செயலி ஆப் உள்ளிட்டவைகள் மூலம் புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.

செய்தியாளர் சந்திப்பில் குமரி எஸ்.பி பத்ரி நாராயணன்

காவலன் செயலிக்கான கட்டுப்பாட்டு அறை சென்னையில் இருப்பதால் குமரி மாவட்டத்தில் எத்தனைபேர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை தெரியவில்லை. அதே சமயம் காவலன் செயலி உள்ளிட்டவைகளில் புகார்கள் பெறப்பட்ட அடுத்த 9 நிமிடங்களில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் செல்கின்றனர். இதைவிட வேகமாக ஸ்பாட்டுக்குச் செல்ல முயற்சி எடுத்து வருகிறோம். குற்ற சம்பவங்கள் இல்லா குமரி மாவட்டத்தை உருவாக்க இது போன்ற நடவடிக்கைகள் தொடரும்" என்றார்.



from Latest News

No comments