Breaking News

வேலூர்: `என் புள்ளைய காப்பாத்தி கொடுங்க!’ -சிகிச்சைக்கு உதவி கேட்கும் தந்தையின் பரிதாபம்

வேலூர் சலவன்பேட்டை காரிய மண்டப பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கலா. இவர்களது 18 வயது மகன் ரவீந்தர், நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால், தற்சமயம் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அபாய கட்டத்தில், 5-வது நிலையை எட்டியிருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து, வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் ‘டயாலிசிஸ்’ சிகிச்சைப் பெற்றுவரும் ரவீந்தர், 30-வது முறையாக ‘டயாலிசிஸ்’ செய்துகொள்கிறார்.

ரவீந்தர்

இந்த நிலையில், ‘‘சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்தால் மட்டுமே சிறுவன் உயிர் பிழைக்க முடியும். அதற்காக 12 லட்ச ரூபாயை கட்ட வேண்டும்’’ என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது. ‘‘நான் அன்றாடங்காச்சி.. அவ்வளவு பணத்துக்கு எங்கே போவேன்’’ என்று கதறும் சரவணன் தன் மனைவி, மகனுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து உதவிகேட்டு மனு கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘நான், சிறியதாக டிப்பன் கடை வைத்திருந்தேன். கொரோனா லாக்டௌனால் கடையை மூட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பின்னர், அந்த தொழிலை மீண்டும் எடுத்து நடத்த முடியவில்லை.

என் பையனுக்கு, பிறந்த சில தினத்தில் இருந்தே சிறுநீரக பாதிப்பு இருக்கு. தொடர்ந்து 18 வயசு வரைக்கும் சிகிச்சை எடுத்துக்கிட்டு தான் இருக்கோம். 9-வது வரைக்கும் படிச்சான். அப்புறம் அவன் உடல்நிலையை காரணம்காட்டி, ‘பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்’னு டீச்சருங்க சொல்லிட்டாங்க. மத்தபடி ஆக்டிவ்வான பையன். ஓடி ஆடி விளையாடுவான். கடவுள் பக்தி அதிகம். இங்க இருக்கிற அம்மன் கோயில் கருவறைக்குள்ளேயே போய் பூஜை பண்ணுவான். கோயில் நிர்வாகனத்தினரும் அதற்கு அனுமதி கொடுத்திருக்காங்க.

தந்தை சரவணன்

கடந்த ரெண்டு மாசத்துல மட்டும் 4 லட்ச ரூபாய்க்கு மேல மருத்துவ செலவு பண்ணிட்டேன். கடனுக்கு வட்டியே கட்ட முடியல. பையன் உயிர் முக்கியம். நான் சிறுநீரக தானம் செய்றேன். ஆனாலும், மருத்துவச் செலவு 12 லட்ச ரூபாய் ஆகும்னு சொல்லியிருக்காங்க. அவ்வளவு பணத்துக்கு எங்கப் போவேனு தெரியல. சொந்தக்காரங்க எல்லாம் ஒதுங்கி நிக்கிறாங்க. யாராவது உதவி பண்ணி என் புள்ளைய உயிரோட காப்பாத்தி கொடுங்க ஐயா.. அவனுக்காகத்தான் இந்த உயிரையே வைச்சிருக்கேன். சாகிற வரைக்கும் உதவுற உள்ளத்தை மறக்க மாட்டேன் சாமி’’ என்றார் கதறி அழுதபடி.



from Latest News

No comments