Breaking News

`ஆதாரங்களை அழிப்பதைத்தான் முதல்வர் செய்துகொண்டிருக்கிறாரா?'- கொதித்த பினராயி விஜயன்

காதிருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வழக்கை சுங்கத் துறை, அமலாக்கத் துறை, என்.ஐ.ஏ உள்ளிட்ட மத்திய அரசு ஏஜென்சிகள் விசாரணை நடத்தி வருகின்றன. விசாரணையின்போது ஸ்வப்னாவின் வங்கி லாக்கரில் இருந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணமும், சுமார் ஒரு கிலோ தங்கமும் எடுக்கப்பட்டது. அந்த பணம் குறித்து கேட்டதற்கு, `கேரள அரசு ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் லைஃப் திட்டத்தில் ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தில் இருந்து கிடைத்த கமிஷன் தொகை' எனக் கூறியுள்ளார். இதனால் கேரள அரசின் லைஃப் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

மேலும், ஸ்வப்னா சுரேசுக்கு கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் ஜலீலுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஜலீலிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் அரசு வாகனத்தில் குரான் எடுத்துச் சென்றதாகவும், தூதரக பார்சல் வழியாக பேரீச்சைப்பழம் கொண்டுவந்து சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு விநியோகித்தது என பல சிக்கலில் சிக்கியுள்ளார். அதேபோல், முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரனும், இந்த வழக்கில் சிக்கியதால் கேரள தலைமைச் செயலகத்தில் இருந்து சில ஆவணங்களை விசாரணைக்காக என்.ஐ.ஏ கேட்டிருந்தது. இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி கேரள தலைமைச் செயலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

ஸ்வப்னா சுரேஷ்

அந்த தீ விபத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் எரிந்ததாகப் புகார் எழுந்தது. அந்த சமயத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்கும், தலைமைச் செயலாளருக்கும் தெரியாமல் இது நடந்திருக்காது என்றும் திட்டமிட்டு ஆதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. இது சம்பந்தமாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியானது. இந்தநிலையில் நேற்று கேரள முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மீடியாக்கள் மீது பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் புகார் அளிப்பதென தீர்மானம் எடுத்துள்ளார்கள்.

Also Read: கேரள தங்கம் கடத்தல் வழக்கு: லாக்கரில் இருந்த பணம், நகை... ஸ்வப்னாவுக்குக் கிடைத்தது எப்படி?

இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கேரள அரசின் 'லைஃப் மிஷன்' திட்டத்தில் முறைகேடு நடந்தது குறித்து விசாரணை நடத்தப்படும். 20 கோடி ரூபாய்க்கான திட்டத்தில் இடைத்தரகர்கள் பணம் வாங்கியதாகத் தகவல் வந்துள்ளது. எனவே, அதுகுறித்த முதற்கட்டமாக விஜிலென்ஸ் விசாரணை நடத்தப்படும். இதற்கு முன்பு வீடு திட்டம் முடியாமல் இருந்தவர்கள் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் வீடுகள் பணி முடித்து சமீபத்தில் திறக்கப்பட்டது. நவம்பரில் மேலும் 50,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட உள்ளன. லைஃப் வீடுகள் கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேரள தலைமைச் செயலகத்தில் தீ விபத்து

சரியான செய்திகளை வழங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மீடியாக்களை பாராட்டுவதுடன், அவர்களுக்கு தேவையான பின் துணையும் வழங்குகிறோம். அதேசமயம் தலைமைச் செயலகத்தில் தீ விபத்து ஏர்பட்ட சமயத்தில் மாநில முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் முன்னிலையில் தீ வைத்ததாக கூறும் அளவுக்கு சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டார்கள். அதுபற்றி சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அமைச்சரவை தீர்மானம் எடுத்திருக்கிறது.

இந்த மாநிலத்தின் முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் தீவைக்கவும், ஆதாரங்களை அழிப்பதையும்தான் செய்துகொண்டிருக்கிறார்கள் என சொல்லும் அளவுக்கு சென்றிருக்கிறார்கள். அது மாநில அரசியல் அமைப்பை அவமானப்படுத்தும் செயல். இது நம்பிக்கையற்ற நிலையை ஏற்படுத்தும் செயல். அவதூறு கிளப்ப வாய்ப்பு உண்டா என ஆராய்வதுடன் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு புகாரும் அளிக்கப்படும்" என்றார்.



from Latest News

No comments