Breaking News

பாகிஸ்தானுக்கு அதிகரித்த சர்வதேச அழுத்தம்! - ஹபீஸ் சயீதுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

2008 மும்பை தாக்குதல் சூத்திரதாரியும் ஜமாத்-உத்-தாவா (JuD) தலைவருமான ஹபீஸ் சயீத் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முன்கள அமைப்பாக கருதப்பட்ட அமைப்பே ஜமாத்-உத்-தாவா-வின் (JuD)அமைப்பாளர் மற்றும் தலைவர் ஹபீஸ் சயீத். 2008-ல் மும்பையில் 10 பயங்கரவாதிகள் நடத்திய தீவிரவாத தாக்குதலில், 166 பேர் பலியாகினர், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். இதனால், அவர் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அவரை ‘உலகளாவிய பயங்கரவாதி’ என்றது. இதைத் தொடந்து ஐக்கிய நாடுகளின் தீர்மானம் எண் 1267 -ன்படி டிசம்பர் 2008-இல் ஜமாத்-உத்-தாவா ஓர் தீவிரவாத அமைப்பாகவும், ஹபீஸ் சயீத் ஓர் தீவிரவாதியாகவும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அமெரிக்க அரசு, ஹபீஸ் சயீத் குறித்த தகவலுக்கு பரிசு தொகை அளிப்பதாக அறிவித்தது. இதனால் பாகிஸ்தானுக்கு உலக அளவில் அழுத்தம் அளிக்கப்பட்டது.

சயீத்

உலகளாவிய பயங்கரவாத நிதியளிப்பு கண்காணிப்பு நிறுவனமான ‘பயங்கரவாத நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF)’ பயங்கரவாத நிதிகளை தடுக்காவிடில் பாகிஸ்தானை பொருளாதார கறுப்பு பட்டியலில் வைக்க இருப்பதாக சொல்ல, அழுத்தம் மேலும் அதிகரித்தது.

இதனால் , தலைமறைவான ஹபீஸ் சயீத்-ஐ பாகிஸ்தான் அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 'பயங்கரவாத செயல்களுக்கு நிதியளிப்பு' வழக்கிற்காக கைது செய்து, லாகூர் கோத் லாக்பேட் சிறையில் அடைத்தனர்.

பாகிஸ்தான்

அதை தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்புத் துறை ஜமாத்-உத்-தாவா தலைவர்கள் மீது 41 வழக்குகளையும், ஹபீஸ் சயீத் மீது நான்கு வழக்குகளையும் பதிவு செய்திருந்தது.

இந்த நிலையில் ஒரே நாளில் இரண்டு பயங்கரவாத எதிர்ப்பு வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, ஹபீஸ் சயீத், அவரது இரண்டு உதவியாளர்களான ஜாபர் இக்பால் மற்றும் யஹ்யா முஜாஹித் ஆகியோருக்கு தலா பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது மைத்துனர் அப்துல் ரஹ்மான் மக்கிக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



from Latest News

No comments