Breaking News

அதி தீவிரப் புயலாகும் நிவர்; 15 மாவட்டங்களில் கனமழை- காற்று 155 கி.மீ வேகத்தில் வீசலாம்!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல் மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயலால், தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்துவருகிறது. இதனால், பல இடங்களில் சாலைகளில் நீர் தேங்கியிருக்கிறது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக, புதுச்சேரி அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.

சென்னை மழை

இந்தநிலையில், வானிலை ஆய்வுமைய தென்மண்டலை இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ``நிவர் புயலானது சென்னைக்குத் தென்கிழக்கே 300 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்குத் தென்கிழக்கே சுமார் 250 கி.மீ தொலைவிலும் கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 240 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் 11 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. தற்போது காற்றின் வேகம் 105 முதல் 115 கி.மீ ஆக இருக்கிறது. இது இன்று மதியம் அதி தீவிரப் புயலாக வலுப்பெறக் கூடும். வடமேற்குத் திசையில் நகர்ந்து இன்று இரவு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கலாம். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாள்களுக்குப் பரவலாக மழைப்பொழிவு இருக்கும்.

Also Read: 2015-க்குப் பின் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி! - நேரில் ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் பழனிசாமி

அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்கள், வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும். கனமழையைப் பொறுத்தவரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழைப்பொழிவு இருக்கக் கூடும். ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது.

சென்னை மழை

பலத்த காற்றைப் பொறுத்தவரை புயல் கரையைக் கடக்கும்போது நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 130 முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். சமயங்களில் 155 கி.மீ வேகத்திலும் காற்று வீச வாய்ப்பிருக்கிறது. மேலும், திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் மணிக்கு 100 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். கடல் இன்று இரவு வரை கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக சென்னையில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது’’ என்று அவர் தெரிவித்தார்.



from Latest News

No comments