Breaking News

`234 தொகுதிகளின் கள நிலவரம்; திமுக-வினரிடம் பேசுவதற்காகவே ஒரு சர்வே!’ - கார்த்தி சிதம்பரம்

"உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அதனைப் பெரிது படுத்தாதீர்கள். எங்கள் அப்பா ஒவ்வொரு முறையும் எங்கள் வீட்டிற்கு வருவது போலத் தான்" என அமித் ஷா தமிழகம் வருகையைக் கிண்டலடித்துப் பேசியதோடு மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அ.தி.மு.க கையாண்ட சாதுரியத்தை கார்த்தி சிதம்பரம் ஆதரித்துப் பேசியிருக்கும் சம்பவம் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக் சிதம்பரம்

திருச்சி விமான நிலையத்தில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். ``வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காகக் காங்கிரஸ் சார்பில் 234 தொகுதிகளிலும் கள நிலவரம் குறித்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்ப வேண்டிய தொகுப்பு எங்களது கையில் உள்ளது. அதை வெளிப்படையாகச் சொல்லமுடியாது. எங்களது பலம் குறித்து தி.மு.க-வினரிடம் பேசுவதற்காகவே நாங்கள் சர்வே எடுத்துள்ளோம்.

தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்பது நாங்கள் தற்போது எடுத்த சர்வேயில் தெளிவாகத் தெரிகிறது. பேச்சுவார்த்தை தற்போது தொடங்கப்படாத நிலையில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ பட்டியலும் வெளியிடப்படவில்லை, கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் பட்சத்தில் தி.மு.க பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள். எத்தனை இடத்தில் நிற்போம் என்பது முக்கியமல்ல.

பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கும் கார்த்திக் சிதம்பரம்

தேர்தல் கூட்டணிக்கு எது சாதகமாக இருக்கும் என்பது மட்டுமே தற்போது கருத்தில் கொள்ளப்படும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றே தற்போது எங்களுடைய குறிக்கோள், எங்களுடைய கூட்டணி வெற்றி பெற வேண்டும் அவ்வளவு தான்.

ப. சிதம்பரம்

இந்தியாவினுடைய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருவது பெரிய செய்தியே அல்ல, இது ஒரு வாடிக்கையானது. டெல்லியில் மட்டும் இருக்காமல் எல்லாம் மாநிலத்திற்கும் அடிக்கடி செல்ல வேண்டும். எங்க அப்பா (சிதம்பரம்) எங்கள் வீட்டிற்கு வருவது போன்றது தான் அமித் ஷா தமிழகம் வருவது. இது ஒன்று பெரிய விஷயம் அல்ல. அதனை பெரிதுபடுத்தாதீர்கள்" என்று சாதாரணமாகக் கூறினார்.

மேலும் கூறுகையில், "மருத்துவ படிப்பில் அறிவித்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக வரவேற்கிறேன், நீட் தேர்வுக்குக்கு முன் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குப் பெரிய அளவில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை, 12 வருடத்தில் 74 பேருக்குத் தான் இடம் கிடைத்துள்ளது. தனியார்ப் பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டும்தான் நீட்டுக்கு முன்பும், பின்பும் இடம் கிடைத்தது, தற்போதுதான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது, இட ஒதுக்கீடு என்பது அனைவரது கூட்டு முயற்சி, தமிழ் சமுதாயத்திற்கு சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி. இவ்விவகாரத்தில் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்.

அமித்ஷா - நரேந்திர மோடி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை சட்ட ரீதியாக முடிவு வந்தால் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளோம். மற்றவர்களுக்குக் கிடைக்காத சலுகை அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. சட்டரீதியாக நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு விடுதலை என்கிற ஒரு தீர்ப்பு வந்தால் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். அவர்களை போராளிகள் போல் சித்தரிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் அனைவரும் ராஜீவ்காந்தி கொலை என்று தான் சொல்கிறார்கள். ராஜீவ்காந்தியுடன் 16 பேர் இறந்துள்ளார்கள். இச்சம்பவத்தை யாருமே பெரிதாகப் பேசவில்லையே" என்று ஆவேசமாகப் பேசினார்.



from Latest News

No comments