Breaking News

புதுச்சேரி: கடற்கரை சாலைக்கு சீல் - காற்றில் பறக்கும் பதாகைகள்!

தமிழகத்தில் வடகிழக்கு புருவமழை தீவிரமடைந்திருப்பதையொட்டி நவம்பர் 21-ம் தேதி வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. இது அதி தீவிரப் புயலாக மாறி கடலூருக்கு அருகே கரையைக் கடக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. புயல் கரையைக் கடக்கும்போது சென்னை, திருவள்ளூர், திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மணிக்கு சுமார் 100 கிலோமீட்டர் வேகத்திலும், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மணிக்கு 120 முதல் 145 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

புதுச்சேரி

புதுச்சேரியில் நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்துவரும் நிலையில், துறைமுகத்தில் 10-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. அதேபோல இன்று காலை முதல் காற்றின் வேகமும், கடலின் சீற்றமும் அதிகரித்திருத்திருக்கிறது. நேற்றிரவு 9 மணிமுதல் நாளை காலை 6  மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

Also Read: கரையைக் கடக்கும் நிவர் புயல் - இதற்கு முன்னர் தமிழகத்தைத் தாக்கிய புயல்கள்!

அதேபோல புதுச்சேரி முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பொது விடுமுறையும் அளிக்கப்பட்டிருக்கிறது. காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்துவருவதால் புதுச்சேரி கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கடற்கரை சாலை மற்றும் கடற்கரைக்குச் செல்லும் சாலைகள் சீல் வைக்கப்பட்டிருக்கிறது. 144 தடை உத்தரவால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், பண்லே பால் பூத், மருந்தகங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கிறது. பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும் அரசு ஊழியர்கள் அனைவரும் பணியில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி

காற்றின் வேகம் அதிகரித்திருப்பதால் பல்வேறு இடங்களில் மக்களே மரங்களின் கிளைகளை மின்கம்பிகளில் உரசாதவண்ணம் கழிக்கத் தொடங்கியிருக்கின்றனர். அதேபோல புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரில் இருக்கும் சென்னை சில்க்ஸ் கடையின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த அலங்கார அட்டைகள் பிய்த்துக்கொண்டு பறந்து விழுந்தன.



from Latest News

No comments