Breaking News

`தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் நிவர்!’ - கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதியில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சென்னையிலிருந்து சுமார் 700 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு முன்பான 6 மணி நேரத்தில் இந்தக் காற்றழுத் தாழ்வுப் பகுதி வடமேற்காக நகர்ந்து புதுச்சேரியிலிருந்து 600 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நிவர் புயல்

இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. நிவர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், வடமேற்குத் திசையில் நகர்ந்து காரைக்கால் - மாமல்லபுரம் இடையே 25-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணிக்குள் கரையைக் கடக்கலாம். இதனால், தமிழகக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும், புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் அதிகபட்சமாக 117 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம். அதேபோல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாருர், காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நாளை (நவம்பர் 24) அதி கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Also Read: கஜா புயல்: `முடிந்துபோன புராணக்கதையா..?’ - நினைவுகூரும் டெல்டா மக்கள்



from Latest News

No comments