Breaking News

`ஒருநாள் கராச்சியே இந்தியாவின் ஒரு பகுதியாகும்!’- மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பட்னாவிஸ்

சமீபத்தில், மும்பையின் பாந்த்ரா மேற்குப் பகுதியிலுள்ள கராச்சி ஸ்வீட்ஸின் ஒரு விற்பனை நிலையத்துக்குச் சென்ற சிவசேனா நிர்வாகி ஒருவர், அதன் பெயரை மாற்ற வேண்டும் என்று வாதிட்டார். சிவசேனாவைச் சேர்ந்த நிதின் நந்த்கோன்கர், அக்கடையின் உரிமையாளரிடம், ``கராச்சி என்ற பெயரை நான் வெறுக்கிறேன், நீங்கள் இந்துவாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் மும்பையில் 'கராச்சி' என்ற பெயரில் வியாபாரம் செய்யக் கூடாது. காரணம், அது தீவிரவாதிகளின் பகுதி. 15 நாள்களில் திரும்பி வருவேன். பெயரை மாராத்தியில் மாற்றியிருக்க வேண்டும்’’ என்று எச்சரிக்கும் தொனியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது.

ஸ்வீட்ஸ்

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த சிவசேனா எம்.பியும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத், ``கராச்சி ஸ்வீட்ஸ் கடையின் பெயரை மாற்ற வேண்டும் என்பது நிதினின் கோரிக்கை. அது, சிவசேனா கட்சியின் கருத்தல்ல’’ என்று தெரிவித்தார். மேலும், ட்விட்டரில், ``கராச்சி பேக்கரி மற்றும் கராச்சி ஸ்வீட்ஸ் நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக மும்பையில் இயங்கி வருகிறது. அவர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தற்போது அந்த நிறுவனத்தின் பெயரை மாற்றச் சொல்வதில் அர்த்தமில்லை. அந்தப் பெயரை மாற்ற வேண்டும் என்பது சிவசேனா கட்சியின் நிலைப்பாடு அல்ல” என்றும் சஞ்சய் ராவத் ட்வீட் செய்துள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ்,``நாங்கள் "அகண்ட பாரதம்" மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஒரு நாள் பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சி இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

பட்னாவிஸ்

மேலும், "லவ் ஜிஹாத் என்று அழைக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முயற்சியை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா மாநில அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான நவாப் மாலிக், ``கராச்சி, இந்தியாவின் ஒரு பகுதியாகும் நேரம் வரும் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். அது சாத்தியமெனில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றிணைக்கப்பட வேண்டும். மூன்று நாடுகளையும் ஒன்றிணைத்து ஒரு நாட்டை உருவாக்க பா.ஜ.க விரும்பினால், அதை நாங்கள் நிச்சயமாக வரவேற்கிறோம்" என்றார்.



from Latest News

No comments