Breaking News

நிவர் புயல்: பயிர்களைப் பாதுகாப்பது எப்படி... விவசாயிகளுக்கு வேளாண்துறையின் ஆலோசனைகள்!

2018-ம் ஆண்டு கஜா புயலால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். நெல், வாழை, தென்னை, மரவள்ளி உள்ளிட்ட பல பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்தார்கள். குறிப்பாக, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை பேராவூரணி, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு கீழே சாய்ந்தன. அந்த இழப்பிலிருந்து விவசாயிகள் இன்னும் மீண்டு வர முடியவில்லை. தற்போது மிகுந்த அச்சத்தோடு எதிர்நோக்கியிருக்கும் நிவர் புயலால் விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதை விவசாயிகள் எப்படி எதிர்க்கொள்ள வேண்டும். வேளாண்மைத்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியிடம் இதுகுறித்துப் பேசினோம். இதோ அவர் சொன்ன சில யோசனைகள். இதை விவசாயிகள் இயன்றவரை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விவசாயி

"தாழ்வான பகுதியில் உள்ள நெல் வயல்களில் வெள்ள நீரை வடிகால் வசதி செய்து வெளியேற்ற, வருகின்ற நவம்பர் 24, 25 மற்றும் 26-ம் தேதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால், அனைத்து விவசாயிகளும் தங்களுடைய பயிர்களை அருகிலுள்ள பொதுச் சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மக் கூட்டுறவு சங்கங்களிலோ, வங்கிகளிலோ உரிய காப்பீட்டுக் கட்டணத்தைச் செலுத்தி, சாகுபடி செய்ததற்கான அடங்கல், சிட்டா, ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் ஆகியவற்றை இணைத்து, இயற்கை இடர்ப்பாடுகளால் ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும். முதிர்ச்சி அடையாத தேங்காய்கள் மற்றும் இளநீர் காய்களைப் பலத்த காற்று வீசத் தொடங்குவதற்குள் அறுவடை செய்ய வேண்டும்.

தென்னை மரங்களின் தலைப்பகுதியின் கீழ்ப்பகுதியிலுள்ள அதிக எடையுள்ள ஓலைகளை வெட்டி அகற்ற வேண்டும். தென்னை மரங்களுக்குத் தற்போது உரமிடுவதையும் நீர் பாய்ச்சுவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். தென்னை மரங்களின் அடிப்பகுதியில் மண்ணால் உயரமாக அணைக்க வேண்டும். வாழை மற்றும் பப்பாளி போன்ற தோட்டக்கலை பயிர்கள் வேகமான காற்றால் அதிக பாதிப்புக்குள்ளாகும் என்பதால், இந்தப் பழ மரங்களை சவுக்கு மற்றும் யூகலிப்டஸ் கம்புகளைக் கொண்டு ஊன்றுகோல் அமைக்க வேண்டும். கனமழையால் நீர் தேங்கினால், உரிய வடிகால் வசதி செய்து வெள்ளநீரை தேங்காமல் வடிக்க வேண்டும். மரவள்ளி பயிரைப் பொறுத்தவரை, காற்றால் வேருடன் சாய்ந்துவிடும் என்பதால், இளம்பயிரில் வேர்ப்பகுதியில் நன்றாக மண் அணைக்க வேண்டும். 90 சதவிகிதம் தேங்காய் முதிர்ச்சி அடைந்திருந்தால் அதை உடனடியாக அறுவடை செய்துவிடலாம்.

கஜா புயல் அனுபவம்

தொடர்ந்து மழைபெய்யும் நாள்களில், விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருள்களை அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளில் பாதுகாப்பாகச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், விளைபொருள்களைப் பாதுகாத்திட போதிய தார்ப்பாய்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருப்பு வைத்திட ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. பலத்த காற்றால் சூரிய சக்தி பம்புசெட்டுகளில் உள்ள சோலார் பேனல்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகம். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோலார் பேனல்களை முழுவதுமாகக் கழற்றி, பாதுகாப்பாக வைத்திட வேண்டும். இதுகுறித்து கூடுதல் தகவல்களை விவசாயிகள் பெற விரும்பினால், வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை அணுகலாம்” எனத் தெரிவித்தார்.



from Latest News

No comments