Breaking News

`இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது!’ - எல்.முருகன்

நெல்லையில் பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்துக்குத் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் எல். முருகன்.துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி

கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளரும் தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``வரும் 30 மற்றும் 31-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெறும் பல்வேறு கூட்டங்களில் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொள்கிறார்.

தமிழகத்தில் நடந்த வேல் யாத்திரை வெற்றி பெற்றுள்ளது. அதேபோல நம்ம ஊர் பொங்கல் விழாவும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழகத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசு, 5,30,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.

சி.டி ரவி மற்றும் மாநிலத் தலைவர் எல்.முருகன்

சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் திருக்குறள், கம்பராமாயணம் உள்ளிட்ட தமிழ் நூல்களை மேற்கோள் காட்டி தமிழை அங்கிகாரப்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் கட்சியைப் பலப்படுத்தி வருகிறோம். எங்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளைக் கூட்டணிக் கட்சியிடமிருந்து கேட்டுப் பெற்றுப் போட்டியிடுவோம்,

பாரதிய ஜனதா கூட்டம்

சசிகலா விடுதலையான பிறகு அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்பது பற்றிப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு, கச்சத் தீவை காங்கிரஸும் தி.மு.க-வும் தாரை வார்த்ததே காரணம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில தலைவர் எல். முருகன், ``தமிழகம் முழுவதும் ஜனவரி 18-ம் தேதி முதல் கட்சியின் பூத் கமிட்டி கூட்டம் நடந்து வருகிறது. இதுவரை 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பணிகள் நடந்துள்ளன.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியைப் பலப்படுத்தி வருகிறோம். கட்சியின் சார்பு அணிகள் சார்பாக பல மாவட்டங்களில் மாநாடுகளையும் நடத்தி வருகிறோம்.

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்வது கண்டிக்கத்தக்கது. தற்போது நான்கு உயிர்கள் பலியாகி இருப்பதற்கு பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.



from Latest News

No comments