Breaking News

சென்னை: `ஆடைகளை அவிழ்த்து விடுவேன்!’ - கணவனை கைது செய்ய வந்த போலீஸாரை மிரட்டிய பெண்

சென்னை, பெசன்ட் நகர், ஓடை குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவர் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி சாஸ்திரி நகர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ரத்தினத்தை போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வரும்படி அழைத்தனர். அதற்கு ரத்தினத்தின் மனைவி உஷா எதிர்ப்பு தெரிவித்தார்.

Also Read: சென்னை: பணத்தைப் பார்த்ததும் மனம் மாறிய 10 ஆண்டு நட்பு! - ஒரிஜினல் போலீஸிடம் சிக்கிய போலி போலீஸ்

ரத்தினம்

இந்தநிலையில் அவரை அரஸ்ட் பண்ணினால் உங்கள் கண்முன்னால் தீக்குளிப்பேன் என்று உஷா, போலீஸாரை மிரட்டினார். ஆனால் போலீஸாரோ ரத்தினத்தைப் பிடிக்க முயன்றனர். அதைக் கவனித்த உஷா, தான் அணிந்திருந்த ஆடையை அவிழ்க்கப்போவதாகக் கூறியதோடு தன்மீது மண்ணெண்ணெய்யை ஊற்றினார். அதைக்கவனித்த போலீஸார், உஷாவை மடக்கிப்பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் உஷா தன்மீது நெருப்பை பற்ற வைத்தார். தீ அவரின் உடல் பற்றி எரியத் தொடங்கியதைப் பார்த்த போலீஸார், உடனடியாக தீயை அணைத்தனர். பின்னர் உஷாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸார், ரத்தினம் மற்றும் அவரின் மனைவி உஷா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். நடிகர் வடிவேல் போலீஸாக நடித்த கம்பீரம் சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சி போல் ஒரு சம்பவம்தான் நடந்திருக்கிறது.

ரத்தினம்

இதுகுறித்து அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ``ரத்தினம், கள்ளச்சந்தையில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு வீட்டிலேயே வைத்து விற்றுவருகிறார். அதை இளைஞர்கள் வாங்கிக் குடித்துவருகின்றனர். அதனால்தான் காவல் நிலையத்துக்கு ரகசியமாக தகவல் தெரிவித்ததால் போலீஸாரும் அங்கு வந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்தச் சமயத்தில்தான் போலீஸை மிரட்ட உஷா, தீ வைத்துக் கொண்டார். இது அவருக்கு வாடிக்கை. கடந்த தடவை போலீஸார் வந்தபோது ஆடைகளை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக தெருவில் ஓடிவந்தார். அதன்பிறகுதான் பெண்கள் மற்றும் பெண் போலீஸார், உஷாவை போர்வையால் போர்த்தி வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர்" என்றனர்.

இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸார் கூறுகையில், ``ரத்தினம் மீது அடையாறு காவல் மாவட்டத்தில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுவிலக்கு பிரிவில் சரித்திர பதிவேடும் ரத்தினம் மீது இருக்கிறது. ரத்தினத்தின் வீட்டில் சோதனை நடத்தச் சென்றபோதுதான் உஷா, தீ வைத்துக் கொண்டார். அவரைக் காப்பாற்றிவிட்டோம். நல்லவேளை உடனடியாக தீ அணைக்கப்பட்டால் அருகில் இருந்த குடிசை வீடுகளில் தீ பரவவில்லை. ரத்தினம் மற்றும் உஷா மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம்"என்றனர்.



from Latest News

No comments