Breaking News

சசிகலா உடல்நிலை: `அரசியல் உள்நோக்கம் இருக்கலாம்!’- தஞ்சையில் சீமான் பேச்சு

``சசிகலா 4 ஆண்டுகளில் ஒரு முறை கூட மருத்துவமனைக்குச் செல்லவில்லை. சிறையிலிருந்து வெளியே வர இருக்கும் நிலையில், திடீரென அவருக்கு கொரோனா, நிமோனியா காய்ச்சல் எனக் கூறப்படுவதில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என நான் கருதுகிறேன்'' என்று தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

தஞ்சை கூட்டத்தில் பேசும் சீமான்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் தஞ்சாவூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் `வெல்லப்போறான் விவசாயி' என்ற தலைப்பில் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தஞ்சை மண்டலத்தில் நாம் தமிழர் கட்சியில் போட்டியிட உள்ள 35 வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``இந்தக் கூட்டம் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் இல்லை. நாங்கள் தேர்தல் வேலையை முன்பே தொடங்கிவிட்டோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, சென்னையில் பெரிய அளவில் மாநாடு நடத்தி, மொத்த வேட்பாளர்களையும் அறிவிக்க இருக்கிறோம்.

வேட்பாளர்களுடன் சீமான்

இதில் சரிசமமாக பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட உள்ளனர்.117 பெண்கள்,117 ஆண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட உள்ளனர். எங்களது பரப்புரைப் பயணத்தில் கட்சி உறுப்பினர்களைச் சந்தித்து தேர்தலில் நாம் எப்படியெல்லாம் பணி செய்ய இருக்கிறோம் என்பதை எடுத்துக் கூறி வருகிறோம். இந்த கூட்டத்துக்கு ஒருங்கிணைந்த தஞ்சை மண்டலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வந்துள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம்.

Also Read: சசிகலா: `நுரையீரல் தொற்று; கடும் நிமோனியா காய்ச்சல்!’ - மருத்துவ அறிக்கை

எங்களிடம் பொருளாதார வலிமை கிடையாது என்பதால், இந்த ஓட்டத்தை முன்பே செய்து மக்களைச் சந்தித்து, மீண்டும் மீண்டும் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை திரும்பத் திரும்பப் பேசி வாக்குகளைச் சேகரிக்கவுள்ளோம்.

கூட்டத்தில் சீமான்

நாங்கள் காசு கொடுத்து வாக்குக் கேட்பவர்கள் அல்லர். சிறந்த ஆட்சியைக் கொடுப்போம் என மக்களிடம் கூறி, மக்களிடம் வாக்குகளைப் பெறுவோம். அதனால், முன்கூட்டியே இப்பயணத்தைத் தொடங்கி விட்டோம்.

ஏற்கெனவே 74 மீனவர்களை இலங்கைக் கடற்படை கொன்று குவித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மீனவர் கூட சுடப்படவில்லை; கொல்லப்படவில்லை என பா.ஜ.க-வினர் பேசுகின்றனர். என்றாலும், இதை வெளியுறவுத் துறை, ராணுவத் துறைக் கண்டித்து இச்செயல் நடக்கக் கூடாது எனக் கூறியதில்லை.

சீமான்

நட்பு நாடு எனச் சொல்லக்கூடிய இலங்கை, பல மீனவர்களைக் கொன்றுள்ளது. இதுவே, வட இந்திய மீனவர்களுக்கு நிகழ்ந்திருந்தால், இதுபோல மத்திய அரசு விடுமா? ஆனால், தமிழன் உயிர் என்றால் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர்.

Also Read: சசிகலா விடுதலை - தமிழகத்தில் என்ன மாற்றம் நிகழும்?! #VikatanPoll

கடந்த 4 ஆண்டுகளில் சசிகலா ஒரு முறை கூட மருத்துவ மனைக்குச் செல்லவில்லை. சிறையிலிருந்து வெளியே வரும் நிலையில், திடீரென அவருக்கு கொரோனா, நிமோனியா காய்ச்சல் எனக் கூறப்படுவதன் காரணம் என்னவென வேறு மாதிரியாக யோசிக்க வைக்கிறது. எனவே இதில், அரசியல் நோக்கம் இருக்கலாம் என நான் கருதுகிறேன்’’ எனத் தெரிவித்தார்.



from Latest News

No comments