Breaking News

பட்ஜெட் 2022: முன்னர் கிரிப்டோவுக்குத் தடைவிதிக்க ஆலோசனை; இன்று அதிகபட்ச வரி! பாதகமா, சாதகமா?

கிரிப்டோ மோகம் முன்னெப்போதையும் விட அதிகரித்து இருக்கும் நிலையில் இன்றைக்கு தாக்கல் செய்யப்பட்ட யூனியன் பட்ஜெட்டில் மத்திய அரசின் முடிவு என்னவாக இருக்கும் எனப் பல யூகங்கள் எழுப்பப்பட்டன. கடந்த வருடத்தில் கிரிப்டோவை தடை செய்வது குறித்து யோசித்து கொண்டிருந்த அரசு, இந்த பட்ஜெட்டில் டிஜிட்டல் சொத்துகளின் வழியாகப் பெறப்படும் வருமானத்தின் மீது வரி விதித்ததன் மூலமாக மறைமுகமாக அதற்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளது.

எந்த வகையிலான டிஜிட்டல் சொத்துகள் பரிமாற்றம் செய்யப்பட்டாலும், நாட்டின் அதிகபட்ச வரி அளவான 30 சதவிகித வரி விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிஜிட்டல் சொத்துக்களில் பெறப்படுகின்ற வருமானத்தை கணக்கிடும் போது அவற்றை வாங்கிய தொகையை தவிர வேறு எந்த வகை செலவுகளையும் கழிப்பதற்கு அனுமதி கிடையாது. ஒருவேளை இந்த சொத்துக்கள் பரிசாக அளிக்கப்பட்டால் பெறுபவர் அதற்கான வரியைச் செலுத்த வேண்டும். டிஜிட்டல் சொத்துக்கள் பரிவர்த்தனை மீது TDS வரியாக 1 சதவிகிதம் பிடிக்கப்படும்.

பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இனி இந்தியாவில் சட்டபூர்வமாக மாற்றம் பெற இருக்கும் கிரிப்டோ உள்ளிட்ட டிஜிட்டல் சொத்துக்களை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துக்களுக்கான பரிவர்த்தனைகள், மிகப்பெரிய அளவில் அதிகரித்து இருக்கின்றன. பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மற்றும் அலைவரிசை அவற்றின் மீதான தனித்துவ வரி விதிப்பு முறைக்குக் காரணமாகி உள்ளன" என்கிறார்.

இதில் ஏற்படுகிற நஷ்டத்தை வேறு எந்த வகை வருமானத்திலிருந்தும் கழித்துக் கொள்ளக் கூடாது என மத்திய பட்ஜெட் தெரிவிக்கிறது. அது மட்டுமில்லாது ஆர்பிஐ சார்பில் டிஜிட்டல் காயின்கள் 'Central Bank Digital Currency' என்ற பெயரில், இந்த ஆண்டில் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. டிஜிட்டல் சொத்துக்களை அனுமதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்த முடிவின் வழியாக இந்தியாவும் இணைந்துள்ளது. டிஜிட்டல் காயின்கள் ஏற்கெனவே சீனாவில் சில நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. டிஜிட்டல் யுவான் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இதே போல அமெரிக்கவும் முயன்று வருகிறது. ஆனால், சீனா அதிகாரப்பூர்வ டிஜிட்டல் காயின்களைத் தவிர்த்து, கிரிப்டோ போன்றவற்றிற்கு ஸ்ட்ரிக்ட்டாக 'நோ' சொல்லி வருகிற நிலையில் இந்தியா கிரிப்டோவை அனுமதிக்க உள்ளது.

பட்ஜெட் மீதான கருத்துக்களை தங்களுடைய சமூக ஊடக பக்கங்களில் மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். கிரிப்டோவில் எதிர்பாராது நஷ்டங்களை சந்தித்து வருகையில் அதன் மீதான வரி பற்றிய அறிவிப்பை மீம் வழியாக பகடி செய்து வருகின்றனர் பதிவர்கள்.

வரி விதிப்பு குறித்த மீம்

தனியார் கிரிப்டோ கரன்சிகள் நாட்டின் பொருளாதார சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீரியஸான விஷயம் என ஏற்கெனவே ஆர்பிஐ கண்டித்திருந்தது. இந்த நிலையில் இது போலான அறிவிப்பு என்னென்ன பாதிப்புகளை விளைவிக்கும் என முதலீட்டாளர்கள் மற்றும் வல்லுநர்கள் கவலை கொண்டிருக்கின்றனர்.



from Latest News

No comments