Breaking News

`புகழ்பாடுவதை நிறுத்துங்கள்’ - ஜெயங்கொண்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்

``உங்க தலைவர்களோட புகழ்பாடுவதை நிறுத்திவிட்டு அடுத்தவர்களை பேசவிடுங்கள்" என்று திமுக- அதிமுகவினர் கவுன்சிலர்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற முதல் கூட்டம் நடைபெற்றது. மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து பேசுவதற்காக அதிமுக 1-வது வார்டு கவுன்சிலர் தங்கபாண்டியன் பேசினார். அப்போது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, குறுக்கிட்ட 12-வது வார்டு திமுக கவுன்சிலர் அம்பிகாபதி என்பவர், ``அதிமுக தலைவர்களின் புகழ்பாடுவதை நிறுத்தி அடுத்தவங்களை பேச சொல்லுங்க.

இது புகழ்பாடும் இடம் கிடையாது” என்றார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் 4-வது வார்டு அதிமுக கவுன்சிலர் செல்வராஜ் உள்ளிட்ட அதிமுக கவுன்சிலர்கள் திமுக கவுன்சிலர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜெயங்கொண்டம் நகராட்சி

அப்போது ஜெயங்கொண்டம் நகர மன்ற துணைத் தலைவர் கருணாநிதி சமரசம் செய்ததை அடுத்து அமைதியாகினர். முதல் கூட்டத்திலேயே அ.தி.மு.க கவுன்சிலர்களை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைத்து கூட்டத்தை தாமதமாக நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் திமுக கவுன்சிலர் அதிமுக கவுன்சிலரை பேசவிடாமல் தடுத்ததாகவும் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



from Latest News

No comments