Breaking News

``மதத்தின் பெயரால் வன்முறை என்பது மிகப்பெரிய பாவம்; எல்லா உயிரும் சமம்தான்!" - சாய்பல்லவி

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பிரபல நடிகை சாய்பல்லவி பேட்டியளித்திருந்தார். அப்போது அவரிடம் நெரியாளர் அரசியல் சார்பு பற்றி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சாய்பல்லவி, ``நான் நடுநிலையான சூழலில் வளர்ந்தவள். இடதுசாரி, வலதுசாரி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், யார் சரி, யார் தவறு என்று எனக்கு தெரியாது. உதாரணமாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் மூலம் காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதையும் தெரிந்துகொண்டேன்.

சமீபத்தில் முஸ்லிம் என சந்தேகிக்கப்பட்டு பசுவை கடத்தியதற்காக ஒருவர் கொல்லப்பட்ட சம்பவமும் எனக்கு தெரியவந்தது. பாதிக்கப்பட்ட அந்த நபரை கொன்ற பிறகு தாக்குதல் நடத்தியவர்கள் ஜெய் ஸ்ரீராம் என முழக்கங்களை எழுப்பினர். இதில் யார் சரி? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

சாய் பல்லவி

அதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் சாய்பல்லவியின் கருத்தை பாராட்டி அவருக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். அதே நேரம் காஷ்மீர் பண்டிட்டுகளின் படுகொலையுடன் முஸ்லிம்களின் படுகொலையை ஒப்பிட்டு பேசியதற்காக சாய்பல்லவியை சிலர் ட்ரோல் செய்யவும் செய்தனர்.

அவரின் பேச்சு விவாதப் பொருளான நிலையில், தான் பேசியது தொடர்பாக சாய்பல்லவி விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ``தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பார்த்த பிறகு, அதன் இயக்குநருடன் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த சம்பவத்தால் இன்னும் பாதிக்கப்படும் மக்கள் மற்றும் தலைமுறையினரின் அவலங்களைப் பார்த்து நான் கலங்கினேன். இனப்படுகொலை போன்ற ஒரு சோகத்தை நான் ஒருபோதும் குறைத்து மதிப்பிட மாட்டேன். அதே நேரம், கோவிட் காலங்களில் நடந்த கும்பல் கொலை சம்பவத்தை என்னால் இன்னும் புரிந்து கொள்ளமுடியவில்லை. அந்த வீடியோவைப் பார்த்து பல நாள்கள் அதிர்ந்தது எனக்கு நினைவிருக்கிறது.

சாய் பல்லவி

எந்தவொரு மதத்தின் பெயராலும் வன்முறை என்பது மிகப்பெரிய பாவம் என்பதை நான் தெரிவிக்க விரும்பினேன். பலர் கும்பல் படுகொலை சம்பவங்களை சமூக வலைதளங்களில் நியாயப்படுத்துகிறார்கள். எல்லாமே உயிர் தானே.... எல்லா உயிர்களும் முக்கியம் என்று நான் நம்புகிறேன்.

ஒரு குழந்தை ஒரே நாளில் பிறந்து, வளர்ந்துவிடாது. எப்போதும் என்னுடைய வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்பதால், நான் பேசுவதற்கு முன்பு என் மனதில் இரண்டு முறை யோசிப்பேன். நான் என் கருத்தை கூறியதின் மூலம் தனியாக உணர்ந்தேன். நான் என்ன தவறு செய்தேன் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். எனக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இப்போது நான் தனியாக இல்லை என்பதையும் உணர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



from Latest News

No comments