Doctor Vikatan: மாதத்தில் பல நாள்களுக்குத் தொடரும் வெள்ளைப்படுதல்... சாதாரணமானதா? சிகிச்சை தேவையா?
Doctor Vikatan: என் வயது 21. எனக்கு மாதத்தில் பல நாள்கள் வெள்ளைப்படுதல் இருக்கிறது. பீரியட்ஸுக்கு முன்னால் வெள்ளைப்படுதல் இருப்பது இயல்பு. மற்ற நாள்களிலும் இருந்தால் அது ஆபத்து என்கிறாள் என் தோழி. இது பிரச்னையின் அறிகுறியா? என்ன செய்ய வேண்டும்?
-அனிதா, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
எல்லாப் பெண்களுக்குமே வெஜைனா பகுதியில் இருந்து வெளியேறும் சுரப்பு என்பது இருக்கும். வயதுக்கு வந்தது தொடங்கி, மெனோபாஸ் வரை பெண்களுக்கு இது இருக்கும். மெனோபாஸுக்கு பிறகு இது குறைந்துவிடும். வெள்ளைப்படுதல் என்பது கருமுட்டை வெளிப்படுவதன் அடையாளம்.
ஒவ்வொரு மாதவிலக்கின் போதும் பெண்களுக்கு ஒரு கருமுட்டை வெளியே வரும். அப்போது, வெள்ளைப்படுதல் சற்று அடர்த்தியாகத் தொடங்கும். அதற்கு முன்புவரை அடர்த்தி குறைவாக, பிசுபிசுப்புத்தன்மையோடு இருக்கும்.
நீங்கள் உட்காரும்போது வெள்ளைப்படுதலால் உங்கள் உடை கறையாகாதவரை, அது நார்மலானதுதான். இது எல்லாப் பெண்களுக்கும் பொதுவானது. இதற்குச் சிகிச்சை எதுவும் தேவையில்லை. அதுவே உட்கார்ந்து எழுந்திருக்கும்போது உங்கள் உடை நனைந்து, கறையானால் அது அசாதாரணமானது என்று எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
அடுத்தது பிறப்புறுப்புப் பகுதியில் அரிப்பு இருந்தாலோ, வெள்ளைப்படுதலின் நிறம் சிவப்பு, பச்சை நிறங்களில் வந்தாலோ, தயிர்போல வந்தாலோகூட அது அசாதாரணம்தான். வெள்ளைப்படுதல் என்பது தூய வெள்ளைநிறத்திலும் எந்த வாடையும் இல்லாமலும் இருந்தால், அது நார்மல். வாடை வந்தால் அசாதாரணமானது என உணர்ந்து, மருத்துவரை அணுக வேண்டும்.
மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு, கர்ப்பப்பையிலோ, சினைப்பையிலோ இன்ஃபெக்ஷன் இருக்கிறதா என்று பார்ப்பார். வெள்ளைப்படுதல் அதன் அறிகுறியாக இருக்கலாம். இதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் கர்ப்பம் தரிப்பதில்கூட பிரச்னை வரலாம்.
சிலருக்கு வெள்ளைப்படுதலால் வலியும் இருக்கும். அது 'பெல்விக் இன்ஃப்ளமேட்டரி டிசீஸ்' (Pelvic inflammatory disease) எனும் பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.
எந்தப் பிரச்னையும் இல்லை, ஆனால் பெரும்பாலான நாள்களில் வெள்ளைப்படுதல் மட்டும் இருக்கிறது, நிற மாற்றமோ, வாடையோ இல்லை என்றால் கவலைப்படத் தேவையில்லை. வாடை இருப்பது இன்ஃபெக்ஷன் இருப்பதன் அறிகுறி என்பதால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடி ஆலோசனை பெறுவது அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News
No comments