Breaking News

Doctor Vikatan: சொரியாசிஸ் பாதிப்பை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா?

என் வயது 36. கடந்த 6 மாதங்களாக தலையில் பொடுகு பிரச்னை இருந்தது. அதற்காக எல்லா சிகிச்சைகளையும் எடுத்தும் குணமாகவில்லை. கடைசியில்தான் அது சொரியாசிஸ் பிரச்னை என்று தெரியவந்தது. சொரியாசிஸ் என்பது சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னைதானே.... அது மண்டைப் பகுதியையம் பாதிக்குமா? ஒருவரிடம் இருந்து மற்றவருக்குத் தொற்றுமா? சிகிச்சையில் நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா?

சருமப் பராமரிப்பு

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்

'சொரியாசிஸ்' என்பது ஒருவகையான ஆட்டோஇம்யூன் குறைபாடு. இது சருமத்தை மட்டுமன்றி, தலை முதல் நகம் வரை, உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும். அந்த வகையில் சொரியாசிஸ் பாதிப்புக்கு மண்டைப் பகுதியும் தப்புவதில்லை. மண்டைப் பகுதியை பாதிக்கும் சொரியாசிஸ் பிரச்னையை ‘ஸ்கால்ப் சோரியாசிஸ்’ (Scalp psoriasis) என்கிறோம்.

மண்டைப் பகுதியில் இருந்து பொடுகு போன்று செதில் செதிலாக உதிர்வதை பலரும் ஆரம்பத்தில் பொடுகு என்றே நினைத்துக் குழம்பிப்போவதும் நடக்கும். மண்டைப்பகுதியில் இருந்து பொடுகு போன்று உதிர்ந்து கொண்டே இருப்பதால் மற்றவர்களை எதிர்கொள்வது தர்மசங்கடமாக இருக்கும். அரிப்பும் இருக்கும். அதற்காக மண்டைப் பகுதியைச் சுரண்டுவது, சொரிவது போன்றவற்றால் அந்த இடங்களில் ரத்தக்கசிவும் புண்ணும் ஏற்படலாம்.

சருமம், கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்

அறிகுறிகளை உணர்ந்த உடனேயே சரும மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம். மருத்துவர் உங்கள் அறிகுறிகளை வைத்து அது சொரியாசிஸ் பாதிப்புதானா என்பதை உறுதிப்படுத்துவார்.

பிறகு, மண்டைப் பகுதிக்கான கார்ட்டிகோ ஸ்டீஸ்ராய்டு ஸ்கால்ப் லிக்யுட் (Corticosteroid scalp liquids) மற்றும் பிரத்யேக ஷாம்பூக்களை பரிந்துரைப்பார். தவிர மேல்பூச்சுக்கான எண்ணெய், உள்ளுக்குச் சாப்பிடும் மாத்திரைகள் போன்றவற்றையும் பரிந்துரைப்பார்.

ஸ்கால்ப் சொரியாசிஸ் இருப்பவர்களுக்கு, முடி உதிர்வும் அதிகம் இருக்கும். சொரியாசிஸ் உள்ளவர்கள் டை அடிப்பது, கூந்தலை ஸ்ட்ரெயிட்டனிங் செய்வது, பெர்மிங் செய்வது போன்ற கெமிக்கல் சிகிச்சைகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.

சொரியாசிஸ் பாதிப்புக்கான சிகிச்சையில் இருப்பவர்கள், குறிப்பிட்ட நாள்களுக்கொரு முறை மருத்துவ ஆலோசனையோடு ரத்தப் பரிசோதனையையும், கல்லீரல் செயல்பாட்டுக்கான பரிசோதனையையும் செய்து பார்க்க வேண்டியது அவசியம். மருத்துவ ஆலோசனையின்றி சுயமாக மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக ஸ்டீராய்டு மருந்துப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.

உச்சந்தலை சொரியாசிஸ்

சொரியாசிஸ் பாதிப்பை சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போல கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமே தவிர, நிரந்தரமாக குணப்படுத்த முடியாது. அப்படிச் சொல்லப்படுகிற சிகிச்சை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

பலரும் நினைக்கிற மாதிரி இது தொற்றுநோயும் அல்ல. ஒருவரிடம் இருந்து மற்றவருக்குத் தொற்றாது. ஆனாலும் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு பாதிப்புள்ளவர், தனக்கான சீப்பு, சோப்பு, தலையணை, டவல் உள்ளிட்டவற்றை மற்றவர்களுடன் பகிராமலிருப்பது நல்லது. இது சொரியாசிஸ் பாதிப்புள்ளவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமான ஆரோக்கிய அட்வைஸும்கூட.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News

No comments