"2 சென்ட் நிலம் இருந்தா போதும்; 30 நாள்கள்ல லாபம் பாத்திடலாம்" ஸ்பிரிங் ஆனியன் சாகுபடி!
ஆங்கிலேயர் ஆட்சியின் போது அவர்களின் உணவு தேவைக்காக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, டர்னிப், பட்டாணி போன்ற 'இங்லீஷ் வெஜிடபிள்ஸ்' எனப்படும் மலை காய்கறிகளை நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் அறிமுகம் செய்தனர். இந்த மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அளவிற்கு மலை காய்கறி உற்பத்தி தற்போது உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில், சைனீஸ் கேப்பேஜ், பார்ஸ்லி, புரக்கோலி, லெட்யூஸ் போன்ற சைனீஸ் காய்கறி சாகுபடியிலும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் சைனீஸ் காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். சைனீஸ் காய்கறிகளில் ஸ்பிரிங் ஆனியன் எனப்படும் வெங்காயத்தாள் பாஸ்ட் புட் உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதனால் இதன் உற்பத்திக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பெரும்பாலான விவசாயிகள் இந்த வெங்காயத்தாள் பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஊட்டி அருகில் உள்ள கொதுமுடி பகுதியில் ஸ்பிரிங் ஆனியன் சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயி நட்ராஜிடம் பேசினோம், " நம்ம வீட்டுல சமையலுக்கு பயன்படுத்துற அதே சின்ன வெங்காயத்தை தான் இந்த ஸ்பிரிங் ஆனியனுக்கும் பயன் படுத்துறோம். சின்ன வெங்காயத்துல பயிர் முற்றியதும் நடவு பண்ணணும். நடவு பண்ணின சில நாள்கள்ல சீக்கிரமா முளைப்பு மேலே வந்துடும். கொஞ்சமா சத்து உரம் போட்டா போதும். 30 நாள்களில் அறுவடைக்கு தயாராகிடும்.
நம்மளே மார்கெட்டுக்கு கொண்டு போய் குடுக்கலாம். அப்படி இல்லைன்னா தோட்டத்துக்கு வந்து வியாபாரிகள் வாங்கிட்டு போறாங்க. ஒரு கிலோவுக்கு இப்போ 25 ரூபாய் கிடைக்குது. இது ஸ்டேண்டர்டு விலை. ஏப்ரல், மே மாசத்துல நல்ல விலை கிடைக்கும். செலவு ரொம்ப ரொம்ப கம்மி. பராமரிப்பும் பெருசா கிடையாது. உங்ககிட்ட 2 சென்ட் நிலம் இருந்தாக் கூட போதும். அதுலயும் வருமானம் பார்க்கலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு அவசர காலத்துல கைக்கொடுக்குது இந்த ஸ்பிரிங் ஆனியன்" என்றார்.
இது குறித்து காய்கறி வணிகர்கள் கூறுகையில், "சின்ன வெங்காயம் விளைவதற்கு முன்பே சரியான தாள் பருவத்தில் அறுவடை செய்வதால் ஸ்ப்ரிங் ஆனியன் எனப்படுகிறது. சூப் வகைகளுக்கு இவற்றை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஊட்டியில் இருந்து பல பகுதிகளுக்கு அனுப்பப் படுகிறது" என்றனர்.
from Latest News
No comments