``மனிதனின் அடிப்படைத் தேவை மறுக்கப்படும்போது புரட்சி ஏற்படுகிறது"- இலங்கை குறித்து காங்கிரஸ் எம்.பி
இலங்கையில் சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி இன்றுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் மக்கள் கடுமையான நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கின்றனர். இதன் காரணமாக இலங்கை அரசுக்கெதிராக, பொதுமக்கள் போராட்டக்களத்தில் குதிக்க, மோசமடைந்துவரும் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் இலங்கை அரசு தடுமாறிவருகிறது. அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகவேண்டும் என கோஷமிட்டு வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கும் போராட்டக்காரர்கள் தீயிட்டனர். மேலும், அதிபர் கோத்தபய ராஜபக்சே கடல்வழியாக வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாகவும் செய்திகள் உலாவுகின்றன. இப்படியிருக்க, அதிபர் மாளிகையில் மில்லியன் கணக்கில் கட்டுக் காட்டாகப் பணத்தை போராட்டக்காரர்கள் கண்டெடுத்ததாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், இலங்கையின் தற்போதைய நிலைகுறித்து காங்கிரஸைச் சேர்ந்த மேற்குவங்க எம்.பி அபிஷேக் சிங்வி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ``இலங்கையின் தற்போதைய நிலைமை, பொதுமக்கள் போதும் என்று கூறும்போது என்ன நடக்கும் என்பது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒரு மோசமான நினைவூட்டலாக உள்ளது. சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்பது எந்தவொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவையாகும். அவை தொடர்ந்து மறுக்கப்படும்போது, இத்தகைய புரட்சி ஏற்படுகிறது" என அபிஷேக் சிங்வி கூறியுள்ளார். மேலும் இத்தகைய ட்வீட் மூலம், ஆளும் பா.ஜ.க-வையும் அபிஷேக் சிங்வி மறைமுகமாக விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.
from Latest News
No comments