Breaking News

3 மணி நேர மின்தடை; அடுத்தடுத்து இருவர் உயிரிழப்பு!- திருப்பூர் அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

கொரோனா வைரஸ் தாக்கம், மருத்துவத்துறையில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. திருப்பூர் அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதேபோல, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அறிகுறி இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

உயிரிழப்பு

Also Read: வேலூர்: `கொரோனா வார்டில் 2 பேர் திடீர் மரணம்!’ - ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமா?

இதற்கிடையே, கட்டுமானப் பணியின்போது, மின் வொயர்கள் துண்டிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குச் செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாக ஆக்ஸிஜன் வழங்குவதில் ஏற்பட்ட கோளாறால், அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்ததாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த யசோதா, கௌரவன் ஆகிய இருவர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாகப் புகார் எழுந்திருக்கிறது. ``நேற்று நன்றாக இருந்தார். இன்று காலை இன்னும் நன்றாக இருந்தார். நன்கு சாப்பிட்டார். நன்கு பேசினார். திடீரென்று மூன்று மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது. மின்சாரம் போனவுடன், செவிலியர்கள் அவருக்குச் சரியாக ஆக்ஸிஜன் கொடுக்கவில்லை. கேட்டால், `அவரது கண்டிஷன் இப்படித்தான் இருக்கிறது. நாங்கள் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்கின்றனர்.

செவ்வந்தி

திடீரென்று, `நெஞ்சு அடைக்கிறது’ என்று சொல்லி அவர் இறந்துவிட்டார். ஏதாவது தெளிவாகச் சொன்னால்தானே, நாம் மாற்றுவழிகளை யோசிக்க முடியும்... இங்கு எதையும் சொல்வதில்லை. கழிப்பறையைக்கூட முறையாகப் பராமரிப்பதில்லை” என்கிறார் கௌரவனின் உறவினர் செவ்வந்தி.

``என் பெரியம்மாவுக்கு மூச்சுத்திணறல் இருந்தது. அவரைத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கே சேர்க்கவில்லை என்பதால், அரசு மருத்துவமனைக்கு வந்தோம். இரண்டு நாள்களாக நன்றாக இருந்தார். மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு, ஆக்ஸிஜன் பம்பிங் வேலை செய்யவில்லை. எல்லோரும் கேள்வி கேட்டவுடன், வேறு சிலிண்டர்களை வைத்துப் பார்த்தனர். ஆனால்,`பம்பிங் பற்றவில்லை. மின்சாரம் வந்தால்தான் சரியாகும்’ என்று சாதாரணமாக பதில் கூறினர்.

பிரகாஷ்

`வொயர் பிரச்னை ரெடி செய்கிறோம்’ என்று மட்டுமே பதிலளித்தனர். ஆனால், மூன்று மணி நேரமாகியும் பிரச்னையைச் சரி செய்யவில்லை. இதனால், என் பெரியம்மா உயிரிழந்துவிட்டார். நேற்று அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இப்போது இறந்த பிறகு, `பாசிட்டிவ் நோயாளி... அப்படித்தான் இருக்கும்’ என்கின்றனர்” என்கிறார் யசோதாவின் உறவினர் பிரகாஷ்.

இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவமனை முதல்வர் வள்ளி கூறுகையில், ``கட்டுமானப் பணியின்போது மின்தடை ஏற்பட்டது. அதனால், ஆக்சிஜன் செல்வதில் எந்த இடையூறும் ஏற்படவில்லை. உயிரிழந்த இருவரும், ஏற்கெனவே மோசமான நிலையில்தான் இருந்தனர்” என்றார். இந்தச் சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ``மருத்துவமனையை நம்பியவர்களின் கொடூர மரணங்கள் இவை. இதுதான் அ.தி.மு.க ஆட்சியின் லட்சணம்.

மு.க.ஸ்டாலின்

கொரோனா மரணங்கள் தவிர, ஆட்சியாளர்களின் அலட்சிய மரணங்களும் அதிகரித்து, மக்களைக் கொல்லும் அரசாக மாறிவிட்டது” என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

Also Read: கொரோனா அலை.. அமெரிக்காவில் சிக்கிய தமிழரின் பாசிடிவ் அனுபவங்கள் ..! #MyVikatan

பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகார்த்திகேயன், ``காலை 11 மணியளவில் ஜே.சி.பி மூலம் பணி செய்துகொண்டிருந்தபோது வொயர்கள் சேதமாகின. இதனால், ஐ.சி.யூ-வுக்குச் செல்லும் லைன் கட்டாகிவிட்டது. 40 நிமிடங்கள் வரை மின்சாரம் தடைப்பட்டிருந்தது. அதேநேரத்தில், ஆக்ஸிஜன் செலுத்துவதில் பற்றாக்குறை ஏற்படாத வகையில் மருத்துவர்கள் செயல்பட்டனர். போதிய அளவுக்கு பேக்அப் இருப்பதால், தடையில்லாமல் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டது.

விஜயகார்த்திகேயன்

உயிரிழந்த இருவரின் உடல்நிலையும் ஏற்கெனவே மோசமாக இருந்ததாக டீன் எனக்கு ரிப்போர்ட் அனுப்பியிருந்தார். அந்த நேரத்தில் ஐ.சி.யூ-வில் 20 பேர் இருந்தனர். ஆக்ஸிஜன் பிரச்னை ஏற்பட்டால், அங்கிருந்த அனைவருக்குமே பிரச்னை ஏற்பட்டிருக்கும். ஐ.சி.யூ-விலுள்ள மற்ற நோயாளிகள் நன்றாகத்தான் இருக்கின்றனர். அஜாக்கிரதையாகச் செயல்பட்ட கான்ட்ராக்டர் மற்றும் இன்ஜினீயர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறேன். இருவரின் உயிரிழப்பு தொடர்பாக, ஆழமான ஆய்வு நடத்தப்படும். வரும் நாள்களில் இப்படி ஒரு சம்பவம் நடக்காத வகையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.



from Latest News

No comments