Breaking News

வெப்பக் காற்று.. கடும் புகை..: கலிபோர்னியா காட்டுத்தீயால் அவதியில் மக்கள்.!

வடக்கு கலிபோர்னியாவில் மீண்டும் காட்டுத்தீ பரவிவருகிறது. தீயால் ஏற்பட்டுள்ள கடும் புகை, வறண்ட பருவநிலை மற்றும் வெப்பக்காற்று காரணமாக மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். இங்கு வசிக்கும் 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிறன்று ஏற்பட்ட காட்டுத்தீயால் நேப்பா - சோனோமா என்ற திராட்சை விளையும் பகுதியில் 72 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு தீயணைப்பு வீரர்களுக்கும், மக்களுக்கும் ஓய்வே கிடைக்கவில்லை என்கிறார் வனத்துறை அதிகாரி டேனியல் பெர்லேண்ட்.

image

சோனோமா கவுண்டி மேற்பார்வையாளர் சூசன் கோரின், சோனோமா ரோசாவில் உள்ள வீட்டை விட்டு அவசரமாக  வெளியேறியுள்ளார். காட்டுத்தீயால் மக்கள் படும் துன்பங்களால் மனமுடைந்துள்ள அவர், " கடவுளுக்குக் கருணை இல்லை. சோனோமா கவுண்டிமீது பச்சாதாபம் இல்லை" என்று வருத்தப்படுகிறார்.

காட்டுத் தீ காரணமாக கலிபோர்னியா மாகாணம் முழுவதும் 36 ஆயிரம் சதுர மைல் சுற்றளவுக்கு 5.8 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அமெரிக்காவின் புயல் எச்சரிக்கை மையம் கணித்துள்ளது. மணிக்கு 30 அல்லது 40 மைல் வேகத்தில் வறண்டக் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

image

ஆளுநர் காவின் நியூசாம், வெப்பக்காற்று வீசும் பகுதிகளில் வாழும் மக்கள் உடனே வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உள்ளூர் நிர்வாகத்தின் எச்சரிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். அவர்களது அறிவுரைகளை தயவுசெய்து கேளுங்கள்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.

காட்டுத்தீயால் கலிபோர்னியா மாகாணத்தில் பல வாரங்களாக பருவநிலையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 8 ஆயிரம் இடங்களில் தீ ஏற்பட்டு 3.7 மில்லியன் ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. கடும்புகை மற்றும் வெப்பக்காற்று காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர். 7 ஆயிரம் கட்டுமானங்கள் சேதமடைந்தன.

image

சாஸ்டா கவுண்டியில் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காட்டுத் தீயால் கருகிவிட்டன. கலிபோர்னியா மாகாணத்தில் பாதிப் பகுதிகள் வெப்பக்காற்றால் பெரும் பாதிப்புகளை அடைந்துள்ளன. சாக்ராமெண்டோ பகுதியில் காற்றில் வெப்பம் 99 டிகிரியாக இருந்தது.

கலிபோர்னியா மக்கள் காட்டுத்தீ பற்றி அறிந்துவைத்து சற்று தயார் நிலையில் இருந்ததால் அதிக ஆபத்துகளில் இருந்து தப்பித்துள்ளது நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. தொடரும் தீயால் பருவநிலை வறட்சியாக மாறும் என்றும் மரம் செடிகொடிகள் கருகும் என்றும் அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மரபணு மாற்ற கத்தரி சாகுபடி; கள ஆய்வுக்கான அனுமதியைத் திருப்பப் பெறுக! வைகோ வலியுறுத்தல்

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

No comments