Breaking News

கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா கடற்கரையில் சில நாட்களுக்கு முன்பு திடீரென இங்கு கூட்டம் கூட்டமாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஒன்றிரண்டு தான் என தொடக்கத்தில் நினைத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

image

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா கடற்கரை புதிய சவாலை எதிர்கொண்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு திடீரென இங்கு கூட்டம் கூட்டமாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஒன்றிரண்டு தான் என தொடக்கத்தில் நினைத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சுமார் 500 திமிங்கலங்கள் ஒரேநேரத்தில் கரை ஒதுங்கின. இவற்றை உயிரோடு மீட்டு கடலில் விட வேண்டும் என்ற நோக்கத்தோடு, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் களமிறங்கினர். ஆனால் சுமார் 400 திமிங்கலங்கள் உயிரிழந்துவிட்டன. 70 திமிங்கலங்களை மட்டுமே மீட்டு கடலில் விட முடிந்தது. மீதமுள்ள திமிங்கலங்கள் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்பதால் அவற்றை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலியா அரசு முடிவெடுத்துள்ளது.

இத்தனை திமிங்கலங்கள் எப்படி கரையை நோக்கி வந்தன என்ற கேள்வி எழும் நிலையில், உடல்நிலை சரியில்லாத திமிங்கலங்கள் கரையை நோக்கி வந்திருக்கும் , அதனை பின்பற்றி மற்ற திமிங்கலங்களும் வந்திருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இது ஒருபுறம் என்றால் உயிரிழந்த 400 திமிங்கலங்களை என்ன செய்வது என்பது மற்றொரு சவால். இவற்றை கடற்கரையிலேயே புதைக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது

image

கடல்சார் பாதுகாப்புத் திட்ட வனவிலங்கு உயிரியலாளர் கிரிஸ் கார்லியன் “ஆஸ்திரேலியாவின் இறந்த திமிங்கிலங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது அதிர்ச்சியளிக்கிறது. திமிங்கலங்கள் ஏன் கூட்டமாக கரை ஒதுங்கின என்பது ஒரு மர்மமாகும். உணவுக்காக கடற்கரைக்கு இழுக்கப்பட்டிருக்கலாம் அல்லது ஒன்று அல்லது இரண்டு திமிங்கலங்களின் தவறான வழிகாட்டுதல்களால் இது மீதமுள்ள திமிங்கிலங்களும் கடற்கரைக்கு வருவதற்கு வழிவகுத்திருக்கும். இது ஒரு பெரிய திமிங்கில குழுவின் தனிப்பட்ட நிகழ்வாக இருக்கலாம். இது ஒரு பெரிய குழுவாக இருந்திருக்கும்”என்று அவர் கூறினார்.

 கடல் விஞ்ஞானி வனேசா பிரோட்டா “திமிங்கலங்கள் கடற்கரைக்கு வர பல காரணங்கள் உள்ளன, அவற்றில் ஊடுருவல் பிழைகள் நிகழ்ந்திருக்கலாம். திமிங்கிலங்கள் மிகவும் வலுவான சமூக அமைப்பைக் கொண்டுள்ளன, இந்த விலங்குகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன, அதனால்தான் இந்த சூழ்நிலையில் துரதிர்ஷ்டவசமாக பல திமிங்கிலங்கள் கூட்டமாக கரைஒதுங்கியுள்ளன" என்று பிரோட்டா கூறினார்.

இதற்கு முன்பாக 1996 இல் மேற்கு ஆஸ்திரேலியா மாநில நகரமான டன்ஸ்பரோவுக்கு அருகில் 320 திமிங்கலங்கள் கரைஒதுங்கின. ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான நியூசிலாந்தின் பேர்வேல் ஸ்பிட்டில் 600 க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் 2017 ஆம் ஆண்டில் கரை ஒதுங்கி, அதில் 350 க்கும் மேற்பட்டவை இறந்தன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

No comments