Breaking News

`சொந்த மாநிலங்களுக்கு நடந்தே சென்ற ஒரு கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்’ - மத்திய அரசு தகவல்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில், இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மட்டும் இந்தியா முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே தங்களின் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினார்கள். இது தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் எழுத்துபூர்வமாக இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

``இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மட்டும் 1.06 கோடிக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்கள் பணியாற்றும் இடங்களிலிருந்து தங்களின் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே திரும்பியிருப்பதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.

தற்போது கிடைத்திருக்கும் தகவல்கள்படி, கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் சாலைகளில் (தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட) 81,385 விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 29,415 உயிரிழப்புகள் நடந்துள்ளன. என்றாலும், இந்த ஊரடங்கு காலத்தில் சாலை விபத்துகளில் இறந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து தனித்தனிப் புள்ளிவிவரங்களை அமைச்சகம் பராமரிக்கவில்லை’’ என்று கூறினார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தேவையான தங்கும் இடங்கள், உணவு, நீர், மருத்துவச் சேவை மற்றும் ஆலோசனைகளை வழங்க இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும், யூனியன் பிரதேசதுக்க்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். சாலை வழியாக நடந்து சென்ற ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில், தேவையான உணவு, குடிநீர், அடிப்படை மருத்துவ வசதிகள், காலணிகள் வழங்கப்பட்டன. அதோடு அவர்கள் ஓய்வு எடுப்பதற்காகத் தனி இடங்கள் உருவாக்கப்பட்டன என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

``ஏப்ரல் 29, 2020 மற்றும் மே 1, 2020 தேதிகளில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களில் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்திருந்தது’’ என்று வி.கே.சிங் தெரிவித்தார்.



from Latest News

No comments