Breaking News

2015-க்குப் பின் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி! - நேரில் ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் பழனிசாமி

நிவர் புயல் காரணமாக கடலோர, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்குக் கனமழையால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. விநாடிக்கு 4,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து இருப்பதாக பொதுப்பணித்துறை தெரிவித்திருந்தது. மொத்தக் கொள்ளளவான 24 அடியில் நீர் மட்டம் 22 அடியை எட்டியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து 1,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட இருப்பதாக பொதுப்பணித் துறை தெரிவித்திருந்தது.

செம்பரம்பாக்கம் ஏரி

இதனால், செம்பரம்பாக்கம் உபரி நீர் வெளியேற்றும் வாய்க்கால் செல்லும் வழியில் உள்ள சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றில் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தமுள்ள 19 மதகுகளில், தற்போது 7 மதகுகள் வழியாக 1,000 கன அடி நீர் தற்போது நீர் திறக்கப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட நீர் வெளியேற்றப்படும் காட்சி

Posted by Vikatan EMagazine on Tuesday, November 24, 2020

2015-ம் ஆண்டுக்குப் பின்னர் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டிருப்பதால், மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், வெள்ளத்தின்போது 30,000 கன அடிக்கும் மேல் நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 1,000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என பொதுப்பணித் துறை தெரிவித்திருக்கிறது. அதேநேரம், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், நீர் நிலைகளின் அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி

முதல்வர் ஆய்வு!

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். நீர்வரத்தைப் பொறுத்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக 7,000 கன அடி நீர் வரை திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.



from Latest News

No comments