Breaking News

காரைக்கால்: `கஜா புயலால் தரைதட்டிய கப்பல்... நிவர் புயலில் என்னவாகும்?!’ - முழு விவரம்

கஜா புயலின்போது காரைக்காலில் தரைதட்டி நிற்கும் கப்பல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே இடத்தில் நிற்கிறது. அதை  அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

காரைக்கால்

காரைக்கால் மாவட்டம், மேலவாஞ்சூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் துறைமுகத்துக்குச் சொந்தமான, தூர்வாரும் பணிக்காக மும்பையிலிருந்து `வீரா பிரேம்' என்ற கப்பல் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் காரைக்கால் வந்தது. தூர்வாரும் பணி முடிந்து கப்பல் மும்பைக்குப் புறப்பட்டது. அப்போது திடீரென வீசிய கஜா புயலில் சிக்கிய கப்பல் மேலவாஞ்சூர் கடலில் தரைதட்டி நின்றது. கப்பல் கேப்டன் உள்ளிட்ட ஏழு பேர் பல நாள்கள் கப்பலைவிட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.

உடனே கப்பலை அப்புறப்படுத்த முடியாது என்று தெரிந்த பிறகு கப்பலிலுள்ள அனைவரும் வேறு கப்பல் மூலம் அவர்களது சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்தநிலையில் மும்பையிலுள்ள கப்பல் நிறுவன அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் காரைக்காலுக்கு வந்து தரைதட்டிய கப்பலை மீட்க முயன்றனர். ஆனால், முயற்சிகள் பயன் அளிக்காததால் கப்பலை உடைத்து எடுக்க முயன்றனர். இதற்கு மத்திய, மாநில அரசுகளின் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

கப்பலை உடைக்கும்போது அதிலுள்ள ரசாயனப் பொருள்கள், எண்ணெய் மற்றும் கழிவுப்  பொருள்கள் கடல் நீரில் கலந்து கடல் நீர் மாசு அடைவதுடன், மீன்வளம் பாதிக்கும் என்பதால் இதற்காக மாநில சுற்றுச்சூழல்துறை அனுமதி வழங்கவில்லை. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கேயே கப்பல் நிற்கிறது.

காரைக்கால்

தற்போது நிவர் புயல் உருவாகியிருப்பதால் புயல் காற்றில் கப்பல் சேதமானால் பல்வேறு சிக்கல்கள் உருவாகும் என்பதால், கப்பலை அங்கிருந்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதை ஏற்று  காரைக்கால் கலெக்டர் அர்ஜுன் சர்மா, கடலோரப் படை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து, கடல் வளம் மற்றும் அருகிலுள்ள கிராம மக்களுக்கு எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் கப்பலை அப்புறப்படுத்த ஆலோசனை மேற்கொண்டார். ``நிவர் புயல் கரையைக் கடந்தவுடன், தரைதட்டிய கப்பலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.



from Latest News

No comments