Breaking News

திருப்பூர்: மின் வாரியத்துக்கு ரூ. 23.67 கோடி கரண்ட் பில் பாக்கி! - ஷாக் கொடுக்கும் மாநகராட்சி

டாலர் சிட்டியான திருப்பூரில் பின்னலாடைத் தொழிலில் மட்டும் மாதம் சுமார் 5 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடக்கிறது. ஆனால், திருப்பூர் மாநகராட்சியோ மின் வாரியத்திற்குக் கொடுக்க வேண்டிய ரூ. 23.67 கோடியைக் கொடுக்க முடியாமல் கடனில் இருக்கிறது. திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான மண்டல அலுவலகம், சுகாதார மையங்கள், சமூக நலக்கூடங்கள், தெருவிளக்குகள், குடிநீர்த் திட்டங்கள், மாநகராட்சி மருத்துவமனைகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் போன்ற சுமார் 300 இணைப்புகளின் பயன்பாட்டிற்கு மின் வாரியம், மின் விநியோகம் செய்து வருகிறது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே

இதற்கான கட்டணத்தை, மின் பயன்பாடு கணக்கு எடுத்ததில் இருந்து, 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்பது தான் வழக்கமான விதிமுறை. ஆனால், திருப்பூர் மாநகராட்சியோ கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் வாரியத்திற்குக் கட்ட வேண்டிய ரூ. 23.67 கோடி ரூபாய் மின் கட்டணத்தைக் கட்டாமல் பாக்கி வைத்துள்ளது.

Also Read: `ரூ.7.70 லட்சம் தண்ணீர் தொட்டி சர்ச்சை...!’ - திருப்பூர் விவகாரத்தின் பின்னணி

``மின் வாரியத்திற்குக் கட்ட வேண்டிய பணத்தை எடுத்து மாநகராட்சியின் மற்ற செலவுகளை செய்து வந்துள்ளனர். குடிநீர், தெருவிளக்கு போன்ற மக்களின் அத்தியாவசியத் தேவையைக் கவனத்தில் கொண்டு பணத்தை கட்டாவிட்டாலும் மின் வாரியம் மின் இணைப்புகளைத் துண்டிக்காது என மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியடைந்த திருப்பூர் மாநகராட்சியில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் வசிக்கின்றனர். மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிகள் மட்டுமல்லாது, பனியன் கம்பெனிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றிலிருந்தும் எக்கச்சக்கமான வரிகள் வசூலிக்கப்படுகின்றன. மக்களிடம் கறார் காட்டி வரி வசூல் செய்யும் மாநகராட்சி, பனியன் நிறுவனங்களிடமிருந்து முறையாக வரிகளை வசூலிக்கிறதா எனத் தெரியவில்லை. இதனை சரியாகச் செய்தாலே பிரச்னை ஏற்பட்டிருக்காது. தமிழகத்தில் வேறு எந்த மாநகராட்சியும் வைத்திருக்காத அளவிற்கு 23 கோடி ரூபாய் கடனை திருப்பூர் மாநகராட்சி வைத்திருக்கிறது” என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

திருப்பூர் டாலர் சிட்டி

இந்த விவகாரம் குறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் அவர்களிடம் விளக்கம் கேட்டுப் பேசினோம். “கொரோனா சூழலால் மக்களிடமிருந்து வீட்டு வரி, தண்ணீர் வரி, பாதாளச் சாக்கடை வரி, சொத்து வரி என மாநகராட்சிக்கு வர வேண்டிய 150 கோடி ரூபாயை வசூல் செய்ய முடியவில்லை. கொரோனா சூழலில் பொது மக்களை சிரமப்படுத்தக்கூடாது என மக்களிடம் கறாராக வரி வசூல் செய்யவில்லை. மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள், பூங்காக்கள், சினிமா தியேட்டர்களில் இருந்து கிடைக்கும் கேளிக்கை வரி போன்றவற்றில் இருந்தும் வருமானம் இல்லை. இப்படி மாநகராட்சிக்கான நிதி ஆதாரங்கள் முழுவதும் குறைந்து போயுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசு கொடுத்தது போக, மாநகராட்சி பணம் சுமார் 5 கோடியை செலவு செய்திருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் நியூ திருப்பூர் குடிநீர்த் திட்டத்தில் 1000 லிட்டர் குடிநீரை ரூ.26.50-க்கு வாங்கி, பொதுமக்களுக்கு அதை ரூ.4.50 என்ற விலையில் கொடுக்கிறோம். இத்தகைய காரணங்களால் தான் மாநகராட்சியின் நிதி நிலைமை கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. நிதி நிலைமை சரியானதும், வரி வசூல் செய்து 2021 மார்ச் மாதத்திற்குள் மின் வாரியத்திற்கு பாக்கி வைத்துள்ள பணத்தை கட்டிவிடுவிடுவோம்” என்றார்.



from Latest News

No comments