Breaking News

நிவர் புயல்: புதுச்சேரியில் இன்று முதல் 3 நாள்கள் ஊரடங்கு! 2 நாள்கள் பேருந்து சேவை நிறுத்தம்

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல், வலுப்பெற்று மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரிக்கு அருகே நாளை தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது 110 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று அதீத கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 27-ம் தேதி வரை மழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

இந்தநிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் இன்று முதல் 3 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. நிவர் புயலை எதிர்கொள்ள புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) பூர்வா கார்க் தலைமையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் புயல் காரணமாக ஊரடங்கு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தைத் தொடர்ந்து புதுச்சேரி ஆட்சியரின் உத்தரவில், ``"நிவர் புயல் காரணமாக பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் இருப்பதைக் கட்டுப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 9 மணி முதல் நாளை மறுநாள் 26-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலாகிறது. அனைத்து கடைகளும் இக்காலத்தில் மூடியிருக்க வேண்டும்.

புதுச்சேரி

பேரிடர் பணிகளில் ஈடுபடுவோர், பாண்லே பால் பூத், பெட்ரோல் பங்க், மருந்தகங்கள், சுகாதார சேவைப்பணியில் ஈடுபட்டோருக்கு விலக்கு தரப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரி, காரைக்காலில் இன்று பிற்பகல் முதல் இரண்டு நாள்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



from Latest News

No comments