Breaking News

பீகார்: `ஊழல் புகார்கள்; முதல்வருடன் நீண்ட நேர ஆலோசனை!' - பதவியேற்ற 3வது நாளில் அமைச்சர் ராஜினாமா

பீகாரின் முதல்வராகக் கடந்த திங்கள் அன்று நிதிஷ்குமார் பதவியேற்றார். அவரோடு, புதிதாக அமையப்பட்ட அமைச்சரவையில் பதினான்கு அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டார்கள். இதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மேவாலால் செளத்ரியும் ஒருவர். அவர் கல்வி அமைச்சராக நியமிக்கப் பட்டதும் எதிர்க்கட்சி உட்படப் பல தரப்புகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பலை கிளம்பியது.

காரணம், இதற்கு முன் அவர் மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தான். இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவ் ட்விட் ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் ட்விட்டர் பக்கத்திலும் ஒரு வீடியோ பகிரப்பட்டது. அதில் "செளத்ரி மீது பல ஊழல் வழக்குகள் உள்ளது. இவருக்குத் தேசிய கீதம் கூடப் பாடத் தெரியவில்லை. இவரைக் கல்வி அமைச்சராக அமர்த்துவது அவமானம் இல்லையா நிதிஷ்ஜி?" என்று கூறியிருந்தார்.

மேவாலால் செளத்ரி சபூர் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த நேரத்தில், பல்கலைக்கழக கட்டடம் கட்டுவதிலும், பணியாளர்கள் நியமனத்திலும் ஊழல் நடந்தாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக இவர் மீது சபூர் காவல் நிலையத்தில் வழக்குபதியப்பட்டுள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக 2017-ம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செளத்ரி, சில மாதங்களில் மீண்டும் சேர்க்கப்பட்டார். இவர்மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது. ஆனால், இந்த வழக்கில் விசாரணை குறித்த குற்றபத்திரிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.

தற்போது இவரைக் கல்வி அமைச்சராக நியமித்ததை தேஜஸ்வி யாதவ் மிகக்கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். தொடர் விமர்சனங்களை அடுத்து, முதல்வர் நிதிஷ்குமாருடன் நீண்ட ஆலோசனை செய்த பிறகு தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். கல்வி அமைச்சர் மேவாலால் செளத்ரியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக ஆளுநர் மாளிகையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பதவியேற்ற மூன்றாவது நாளிலேயே அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்தது பீகார் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



from Latest News

No comments