Breaking News

`வால்காவோடு வைகையை இணைத்தவர்!’ - துப்யான்ஸ்கி மறைவுக்கு அறிஞர்கள், தலைவர்கள் இரங்கல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மாஸ்க்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார் ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர், பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி. சோவியத் யூனியன் பிரிய ஆரம்பித்த போது, அங்குத் தமிழ் மொழி கற்றல் ஆர்வமும் மிகக் குறைய ஆரம்பித்தது. இவரின் கடும் முயற்சியால் தமிழ்மொழி உயிர்ப்போடு உள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக ரஷ்யாவில் தமிழ் வளர்க்கும் பணியைச் செய்து வந்திருக்கிறார். ரஷ்யாவில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்து வந்த இவர், அதோடு, வருடத்திற்கு ஒருமுறை சங்கத் தமிழ் குறித்த வாசிப்பு பட்டறையையும் நடத்தி வந்துள்ளார்.

அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி தமிழ் மொழியில் புலமை வாய்ந்தவர். தமிழில் மிகச் சரளமாகப் பேசக்கூடியவர். இவர் பல முறை தமிழகம் வந்து சென்றுள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற உலக செம்மொழித் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கிறார். அதோடு மாநாட்டில் தொல்காப்பியம் குறித்த ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்துள்ளார்.

தமிழ் எழுத்தாளர்கள் வைரமுத்து, ஜெயகாந்தன் உள்ளிட்ட பலரோடும் நீண்டகால நட்பு கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமில்லாது சமஸ்கிருதமும் நன்கு அறிந்தவர் அலெக்சாண்டர். அதோடு, திறமையான இசைக் கலைஞரும் கூட. இவரின் இறப்புக்குத் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தலைவர்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

கவிஞர் வைரமுத்து தனது இரங்கல் செய்தியில்,

“ரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மாஸ்கோவில் மறைவுற்றார்.

வால்காவோடு வைகையை இணைத்தவருக்கு எங்கள் புகழ் வணக்கம்.

இது ஈடுசெய்தாக வேண்டிய இழப்பு. செய்தால்தான் துப்யான்ஸ்கியின் உயிர் ஓய்வுறும்.

யார் முன்வரினும் எங்கள் உறுதுணையும் உறுபொருளும் உண்டு” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`செவ்வியல் தமிழ் ஆய்வுக்கு பேரிழப்பு' என எம்.பி ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.

இவரின் இழப்பு தமிழ் உலகில் ஈடு செய்யமுடியாத ஒன்று.



from Latest News

No comments