Breaking News

கரூர்: `ஒன்றிய செயலாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை இல்லை!' - கொதிக்கும் தே.மு.தி.க மா.செ

"தே.மு.தி.க கட்சியின் கரூர் ஒன்றிய செயலாளரை தாக்கிய மர்ம கும்பல் மீது, சம்பவம் நடந்து 4 மாதங்கள் கடந்தும் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், கரூர் மாவட்ட தே.மு.தி.க சார்பில் வரும் 2- ஆம் தேதி காவல்துறையினரை கண்டித்து ஆர்பாட்டம் நடத்த இருக்கிறோம்" என்று தே.மு.தி.க மாவட்ட செயலாளர் கே.வி.தங்கவேல் தெரிவித்தார்.

பேட்டியளிக்கும் கே.வி.தங்கவேல்

Also Read: `கரூரில் நலிவைச் சந்திக்கும் தொழில்கள்!’ - லக்ஷ்மி விலாஸ் வங்கி விவகாரத்தில் ஜோதிமணி எம்.பி

கரூர் தே.மு.தி.க நகர செயலாளராக பணியாற்றி வருபவர் எஸ்.ஆர்.ஜெயக்குமார். இவரை, கடந்த ஜூலை, 22 - ஆம் தேதி மர்ம கும்பல் ஒன்று கொலைசெய்யும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. படுகாயமடைந்த ஜெயக்குமார், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த நிலையில், ஜெயக்குமார் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் மீது, காவல் துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தே.மு.தி.கவினர் கொதிக்கின்றனர். இந்த நிலையில், கரூர் மாவட்ட தே.மு.தி.க அலுவலகத்தில், மாவட்ட அவைத்தலைவர் அரவை எம்.முத்து தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களை சந்தித்த. கரூர் மாவட்ட செயலாளர் கே.வி.தங்கவேல்,

பேட்டியளிக்கும் கே.வி.தங்கவேல்

"கடந்த ஜூலை மாதம் 22 ம் தேதி அன்று கரூர் ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.ஜெயக்குமாரை, அடையாளம் தெரியாத கூலிப்படை ஆட்கள் தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்தினர். மர்ம கும்பலால் கடுமையான தாக்குதலுக்குண்டான ஜெயக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நாங்கள் அளித்த புகாரின்பேரில், இது தொடர்பாக வெங்கமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால், வெறும் வழக்கு மட்டுமே பதிவு செய்துள்ள காவல்துறை இன்றுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூலிப்படை ஆட்களை கொண்டு தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது இன்றுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கரூர் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டது. 4 மாதங்கள் கடந்தும் நடவடிக்கை இல்லை.

வெங்கமேடு காவல் நிலையம்

இதனால், தே.மு.தி.க நிறுவனத்தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் கேப்டனின் உத்திரவிற்கிணங்க, பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனைக்கிணங்க, வரும் 2 - ஆம் தேதி அன்று கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தே.மு.தி.க சார்பில் மாபெரும் ஆர்பாட்டம் நடத்த இருக்கிறோம். தே.மு.தி.க ஒன்றிய செயலாளரின் மீது தாக்குதல் ஏற்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை தேவை. ஒன்றியச் செயலாளரை தாக்கியவர்கள் மீது வெங்கமேடு காவல் நிலைய போலீஸார் நடவடிக்கை எடுக்கும்வரை தொடர் போராட்டம் நடத்துவோம்" என்றார் ஆவேசமாக!.



from Latest News

No comments