Breaking News

புதுக்கோட்டை: குடும்ப வறுமை - பச்சிளங்குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்ற தம்பதி!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹாஜிம் முகமது. இவரின் மனைவி ஆமினா பேகம். இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், நான்காவதாக கடந்த 15 நாள்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. அந்தப் பெண் குழந்தை பிறந்த அடுத்த நாளே காணாமல் போயிருக்கிறது. பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் குழந்தை பிறந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு குழந்தையைப் பார்க்கச் சென்றிருக்கின்றனர்.

விராலிமலை காவல் நிலையம்

அப்போது, கணவனும் மனைவியும் குழந்தையைப் பார்க்க முடியாது என்று கூறி சாக்குப் போக்குச் சொல்லி சமாளித்திருக்கிறார்கள். சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் கணவனும் மனைவியும் பச்சிளங்குழந்தையை ஒருவரிடம் பணத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக விராலிமலை போலீஸாரிடம் புகார் கொடுத்தனர். போலீஸார் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த புதுக்கோட்டை சைல்டு லைன் அமைப்பினர், புகார் கூறப்பட்ட பெற்றோர்களிடம் விராலிமலை காவல் நிலையத்தில்வைத்து விசாரணை நடத்தினர்.

Also Read: `ஆண் குழந்தை; ஜோசியம்; போட்டுக்கொடுத்த தோழி!'- திருச்சிக்கு அதிர்ச்சி கொடுத்த குழந்தை விற்பனை

ஆமினா பேகத்திடம் நடத்திய விசாரணையில், தங்களது குடும்பம் ஏழ்மை நிலையிலிருந்ததால், குடும்பக் கஷ்டத்தைப் போக்க ஈரோட்டைச் சேர்ந்த குழந்தையில்லாத தம்பதியருக்கு, ஒரு லட்ச ரூபாய்க்குக் குழந்தையை விற்றதை ஒப்புக்கொண்டார். விராலிமலையைச் சேர்ந்த கண்ணன் என்ற இடைத்தரகர் மூலம் குழந்தையை விற்பனை செய்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். குடும்ப வறுமையைப் போக்க, பெற்ற குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு அந்தத் தம்பதியர் விற்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

குழந்தை

குழந்தையை மீட்டு ஈரோட்டைச் சேர்ந்த தம்பதி குறித்தும், இடைத்தரகர் கண்ணனிடமும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இது பற்றிக் கூறும் சைல்டு லைன் அதிகாரிகள், ``குழந்தையைத் தத்தெடுக்க விரும்புபவர்கள் முறையாக, சட்டப்படி தத்தெடுக்கலாம். அதைவிடுத்து, இது போன்று பணத்துக்காக, குடும்ப வறுமை என்றெல்லாம் சொல்லி விற்கவோ, வாங்கவோ கூடாது. இதை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.



from Latest News

No comments