இலவச வேட்டி, சேலைகள்: கேரளாவுக்கு கடத்தல்... பூ வேலைப்பாடுகளுடன் ரிட்டர்ன்?! - அதிகாரிகள் அதிர்ச்சி
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகில் உள்ள பிதர்காடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், தீபாவளியை முன்னிட்டு இதே பகுதியில் உள்ள ஒரு தனியார் துணிக்கடையில், தன் மனைவிக்கு புடவை ஒன்றை வாங்கி உள்ளார். வீட்டுக்கு வாங்கி வந்த புடவையை பிரித்துப் பார்த்த மனைவி, அதில் தமிழ்நாடு அரசின் முத்திரை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், இது தமிழக அரசு வழங்கிய விலையில்லா சேலை என்பதை அறிந்து மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அந்த சேலையை எடுத்துக்கொண்டு அதே கடைக்குச் சென்று முறையிட்டுள்ளனர். தெரியாமல் நடந்துவிட்டதாகக் கூறி, அந்த புடவையை ரகசியமாக வாங்கி வைத்துவிட்டு வேறொரு சேலையை மாற்றி கொடுத்துள்ளனர்.
மேலும் இது குறித்து நுகர்வோர் அமைப்புகளிடமும் புகார் கொடுக்க, தாசில்தார் தலைமையிலான குழுவினர், அந்த துணிக்கடையில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், அதிரவைக்கும் பல முறைகேடுகள் தெரிய வந்துள்ளன.
பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து பேசுகையில், "மக்கள் கூட்டம் அதிகமா இருந்துச்சி. அவசரமா புடவைய வாங்கிட்டு, வீட்டுக்கு போய்ட்டேன். விடிய காலைல பாத்தா, இலவச வேட்டி சேலைல இருக்கற மாதிரி மார்க் போட்ருக்காங்க. அரசாங்க சேலைய ஏமாத்தி 275 ரூபாய்க்கு வித்துட்டாங்க. அதுக்கு அப்புறம் போயி வேற குடுங்கன்னு மாத்திட்டு வந்துட்டேன்" என்றார் அப்பாவியாக.
இந்த முறைகேடு குறித்து கூடலூர் வருவாய்த்துறை அதிகாரிகள் நம்மிடம் பேசுகையில், ``தமிழக அரசின் விலையில்லா சேலையை இதே பகுதியைச் மேலும் சிலருக்கு 300 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர். இந்த சேலைகள், தமிழகத்திலிருந்து கேரளா கொண்டு செல்லப்பட்டு, அங்கு பூ வேலை செய்யப்பட்டு, விற்பனை செய்ய அனுப்புகின்றனர். இந்த கடையில் விற்பனைக்கு வைத்திருந்த, எட்டு விலையில்லா சேலைகளை பறிமுதல் செய்துள்ளோம். மேலும் கேரளாவுக்கு சென்று விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்" என்றனர்
இந்த விவகாரம் குறித்து கடை உரிமையாளர், "கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியிலிருந்து புடவைகளை மொத்தமாக ஜவுளி மொத்த கொள்முதல் செய்தேன். அதில், இந்த சேலைகளும் கலந்து வந்துள்ளன. வேறு எதுவும் எனக்கு தெரியாது" என்றார்.
கூடலூர் நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், "தமிழக அரசு மக்களுக்கு வழங்கும் இலவச வேட்டி சேலைகளை சட்டவிரோதமாக, ஒரு சில அதிகாரிகளின் உடந்தையுடன் மொத்தமாக வாங்கி, மூட்டை மூட்டையாக கேரளாவுக்கு கடத்திச் செல்கின்றனர். அங்கு கொண்டு சென்றப்பின், அரசு லோகோவை அழித்து, சில பூ வேலைப்பாடுகளை செய்து கடைகளில் விற்கின்றனர். இதை அறியாத அப்பாவி பழங்குடிகளும்,தோட்ட தொழிலாளர்களும் ஏமாறுகின்றனர்" என்றனர்.
from Latest News
No comments