Breaking News

நெல்லை: `மகன் கைதுக்கு எதிர்ப்பு; போலீஸ் முன்னிலையில் தீக்குளித்த தாய்!’ - என்ன நடந்தது?

நெல்லை சுத்தமல்லி சத்தியாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா. அவரது கணவர் தர்மராஜ், சில வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றதால், தனது இரு மகன் மற்றும் மகளை கஷ்டப்பட்டு வளர்த்தார். மகள் திருமணமாகி கரூரில் வசித்து வருகிறார்.

Also Read: இரண்டு வருடங்களுக்கு முன்.... நெல்லை கந்துவட்டி தீக்குளிப்பு..! இன்றைய நிலை என்ன?

சகுந்தலாவுடன் இரு மகன்களான பிரசாந்த் (வயது 28) மற்றும் பிரதீப் (20) ஆகியோர் சுத்தமல்லியில் வசித்து வருகின்றனர். மகன்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடந்த பிரதீப், எதிர்வீட்டில் வசிக்கும் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததால், கைதாகி சிறைக்குச் சென்று வெளியில் வந்துள்ளார்.

சிறையில் இருந்து வெளியே வந்த பிரதீப், தன் நண்பர்களுடன் சேர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக பிரதீப்பை சுத்தமல்லி போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சகுந்தலா

இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு சகுந்தலாவின் வீட்டுக் கதவைத் தட்டிய போலீஸார், வீட்டுக்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த மூத்த மகன் பிரசாந்தை விசாரணைக்கு வருமாறு அழைத்ததாகத் தெரிகிறது.

காவல்துறையினர் ஏற்கெனவே ஒரு மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால், மன வருத்தத்தில் இருந்த சகுந்தலா, எந்தக் குற்றமும் செய்யாத மூத்த மகன் பிரசாந்தை அழைத்துச் செல்ல போலீஸ் முயன்றதால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

தீக்குளித்து வெளியில் கிடந்த இடம்

சுத்தமல்லி காவல் ஆய்வாளரான குமாரி சித்ரா, வீட்டில் இருந்த சகுந்தலாவை அவதூறாகப் பேசியதுடன் பிரசாந்தை இழுத்துச் செல்லவும் முயன்றதாகக் கூறப்படுகிறது. அதனால் அவமானமும் ஆத்திரமும் அடைந்த சகுந்தலா, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி போலீஸாரின் கண்ணெதிரிலேயே தீக்குளித்தார்.

தீக்குளித்த தாய் சகுந்தலாவை போலீஸார் மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் பற்றி அறிந்ததும் நெல்லை மாவட்ட எஸ்.பி-யான மணிவண்ணன், சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினார்.

மாவட்ட எஸ்.பி மணிவண்ணன்

இந்தச் சம்பவம் பற்றி பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், ``கோமதி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3-ம் தேதி திருட்டு நடந்தது. அந்த திருட்டில் பிரதீப் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஈடுபட்டுள்ளார். அந்த திருட்டு தொடர்பாக புரதீப் உள்ளிட்ட மூவரை பிடித்து விசாரணை நடத்தியதில் மூவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

திருட்டு நடந்த வீட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட கம்ப்யூட்டர், பிரதீப் வீட்டில் இருந்துள்ளது. அதனாலதான் அவரது வீட்டுக்கு போலீஸார் சென்று அங்கிருந்த கம்ப்யூட்டரைக் கைப்பற்ற முயன்றுள்ளனர். அதைத் தடுத்த சகுந்தலா, யாரும் எதிரபாராத வகையில் தீக்குளித்துள்ளார்.

தீக்காயம் அடைந்த அவரை போலீஸார்தான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதுதான் அங்கு நடந்து என போலீஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அங்கு நடந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” என்றார்.



from Latest News

No comments