Breaking News

திருவள்ளூர்: `கையை அறுத்து போட்டோ அனுப்பு!' - இன்ஜினீயரின் `காதல்’ விளையாட்டு

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் தற்கொலையை மறைத்த பெற்றோர், அவரின் சடலத்தை அவசர அவசரமாகத் தகனம் செய்துவிட்டனர். அதன் பிறகு மாணவி பயன்படுத்திவந்த செல்போனை அவரின் பெற்றோர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த செல்போனிலிருந்த மெசேஜ்கள், வீடியோக்களைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், மாணவியை அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிய தகவல் குறித்து விரிவாக இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ மற்றும் மெசேஜ் மூலம் தெரிவித்திருந்தார்.

ஃபேஸ்புக்

இதையடுத்து மாணவியின் தந்தை வேலு, ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகாரளித்தார். ஆனால், போலீஸாரோ மாணவியின் மரணத்தை மறைத்த குற்றச்சாட்டுக்காக வேலுவைக் கைதுசெய்தனர். அதனால் மாணவியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்த மாணவியின் தந்தை வேலு, மீண்டும் மகளின் மரணத்துக்கு நீதி கேட்டு திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தனைச் சந்தித்துப் புகாரளித்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கும்படி அரவிந்தன், ஆர்.கே.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் ஆர்.கே.பேட்டை போலீஸார், மாணவியின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர். முதலில் மாணவியின் செல்போனிலிருந்து தகவல்கள் குறித்து விசாரித்தனர். அப்போது மாணவி, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்த தகவல் தெரியவந்தது. உடனடியாக அந்த இளைஞரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், `நான், மாணவியைக் காதலித்தது உண்மைதான். ஆனால் எங்களின் காதலில் விரிசல் ஏற்பட்டுவிட்டது’ என்று போலீஸாரிடம் கூறினார். அதனால் போலீஸார் மாணவியின் செல்போனுக்கு வந்த மெசேஜ்கள் குறித்து விசாரித்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரின் விவரம் கிடைத்தது.

இலங்கைப் பெண்

உடனடியாக போலீஸார் இலங்கைக்குச் சென்று அந்தப் பெண்ணைச் சந்திருக்கின்றனர். அப்போது அவர், மாணவியின் மரணத்துக்குக் காரணம் தீரன் என்ற இளைஞர் என்றும், அவர் குறித்த தகவல்களையும் போலீஸாரிடம் கூறியிருக்கிறார். அந்தப் பெண் அளித்த தகவலின்படி போலீஸார் தலைமறைவாக இருந்த தீரனைப் பிடித்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து ஆர்.கே.நகர் போலீஸார் கூறுகையில், ``தற்கொலை செய்துகொண்ட மாணவியின் செல்போனை ஆய்வு செய்தபோதுதான் அவர் விஷம் குடித்த வீடியோ பதிவு மற்றும் தீரன் குறித்து இலங்கைப் பெண் அனுப்பியிருந்த மெசேஜ்கள் தெரியவந்தன. அதன் பிறகு இலங்கையைச் சேர்ந்த பெண்ணிடம் விசாரித்தபோது மாணவியைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியது அதே கிராமத்தைச் சேர்ந்த தீரன் என்று தெரிந்தது. அவர் டிப்ளோமா இன்ஜினீயரிங் படித்திருக்கிறார்.

Also Read: நாகர்கோவில் காசி மீது ஏழாவது வழக்கு! - 5 நாள் சி.பி.சி.ஐ.டி காவலுக்கு நீதிமன்றம் அனுமதி

மாணவி

தற்கொலை செய்துகொண்ட மாணவியும் அவருடன் படிக்கும் மாணவன் ஒருவனும் காதலித்திருக்கின்றனர். அப்போது அந்த மாணவனுக்கு அறிமுகமான தீரனின் செல்போன் வாட்ஸ்அப்பிலிருந்துதான் மாணவிக்கு மெசேஜ்களை அனுப்பியிருக்கிறார். அதை தீரனும் பார்த்திருக்கிறார். இந்தச் சமயத்தில் இவர்களின் காதலுக்கு வில்லனாக தீரன் மாறியிருக்கிறார். மாணவியிடம் பேசிய தீரன், `உன்னுடைய காதல் விவகாரம் எனக்குத் தெரியும்’ என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு தீரனின் கவர்ச்சியான பேச்சுக்கு மாணவி மயங்கியிருக்கிறார்.

இதையடுத்து மாணவனின் காதலில் விரிசல் ஏற்பட, தீரனும் மாணவியும் காதலிக்கத் தொடங்கியிருக்கின்றனர். அப்போது மாணவியிடம், `நீ என்னைக் காதலிப்பது உண்மையென்றால் பிளேடால் கையை அறுத்து அதை போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பு’ என்று தீரன் கூறியிருக்கிறார். அதன்படி மாணவியிடம் பல தடவை தன்னுடைய கையை பிளேடால் அறுத்து அந்தப் போட்டோக்களை அனுப்பியிருக்கிறார். அந்தப் போட்டோக்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். மேலும், மாணவியின் செல்போனின் தீரனுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்களைக் கைப்பற்றியிருக்கிறோம். இலங்கையைச் சேர்ந்த தீரனின் முன்னாள் காதலி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், மாணவியின் அம்மா அளித்த புகாரின்படியும் தீரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்திருக்கிறோம்.

மாணவி

தீரனின் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தபோது, அதில் ஏராளமான பெண்களுடன் அவருக்கு நட்பு இருந்தது தெரியவந்திருக்கிறது. இலங்கைப் பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி அவரிடமிருந்து 50 லட்சம் ரூபாய் வரை தீரன் ஏமாற்றியிருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் தற்கொலை செய்த மாணவியிடமிருந்தும் பணம் வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்த இரண்டு பெண்களைத் தவிர மேலும் சிலரை நாகர்கோவில் காசியைப்போல இன்ஜினீயர் தீரன் ஏமாற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.



from Latest News

No comments