Breaking News

`பசுக்களைப் பாதுகாக்க தனி அமைச்சகம்; புதிய வரி!’ - மத்தியப்பிரதேச அரசு திட்டம்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பசுக்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் பசுக்கள் நல அமைச்சகமான 'கோமாதா அமைச்சகம்' என்ற தனி அமைச்சகம் ஒன்றை அமைக்கப்போவதாகவும், அதற்கான முதல் கூட்டம் அகர் மால்வா மாவட்டத்திலுள்ள பசுக்கள் சரணாலயத்தில் 22-ம் தேதி நடைபெறும் என்றும் அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் அறிவித்திருந்தாா்.

இந்தநிலையில், கடந்த 22.11.2020 அன்று மதியம் 12 மணியளவில் கோமாதா அமைச்சகத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. அதில் காணொலியின் வாயிலாகக் கலந்துகொண்டு பேசிய ம.பி முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், ``தற்போது பசுக்கள் மீதான அக்கறை நமது கலாசாரத்தில் குறைந்துவருவதைக் காணமுடிகிறது. அதனால், நமது மாநிலத்திலுள்ள பசுக்களையும், பசுக்கள் பராமரிக்கப்படும் கோசாலைகளையும் மிகுந்த பொறுப்புடன் பாதுகாக்கும் முயற்சியில் பசுக்களுக்கென தனி அமைச்சகம் ஒன்றை அமைத்திருக்கிறோம்.

பசுக்களும் மாடுகளும்

இதன் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்போகும் சிறிய அளவிலான வரியைக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படவிருக்கிறது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர்,``பசுவாலும், பசுவின் உப பொருள்களாலும் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தவிருக்கிறோம். பசும்பால், குழந்தைகளின் உடல்நலனை மேம்படுத்தும். இயற்கைக்குக் கேடு விளைவிக்கும் ரசாயன உரங்களுக்கு மாற்றாக பசுவின் சாணம் பயன்படும். அதுமட்டுமல்லாமல் பசுவின் கோமியம் பூச்சிக்கொல்லியாகவும், மருந்தாகவும் உபயோகப்படும். எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பசுக்களைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.

``சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வாக கோமாதா இருப்பதால், அதை 'புனித மாதா’வாக அறிவிக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது" - சிவராஜ் சிங் சௌகான்.

இந்த அமைச்சகத்தில் கால்நடை பராமரிப்பு, ஊரக வளர்ச்சி, காடுகளின் பராமரிப்பு, வீடு மற்றும் உழவர்கள் நலத்துறை ஆகிய துறைகள் இடம்பெறும். இதை வெற்றிகரமாகச் செயல்படுத்த மக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்’’ என்று அவர் கேட்டுக்கொண்டாா்.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அம்மாநில வனத்துறை அமைச்சர் விஜய் ஷா, உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்தநிலையில், பசுக்களின் பாதுகாப்புக்காகப் புதிய கோசாலைகளை உருவாக்கவும், அவற்றைப் பராமரிக்கவும் சிறிய அளவிலான வரி விதிப்பைப் புதிதாக நடைமுறைக்குக் கொண்டுவரவும் மத்தியப்பிரதேச மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.



from Latest News

No comments