Breaking News

கோவை: `பெருமை பேசறேன்னு தவறா பேசாதீங்க..!' - காட்டமான முதல்வர்

கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நீட் தேர்வில் இருந்து யாருக்கும் விலக்கு கொடுக்கப்படவில்லை. நீட் தேர்வு கூடாது என்பதுதான் அ.தி.மு.க- வின் நிலைப்பாடு. இந்தியாவிலேயே நீட்டை எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழகம் தான். நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதால்தான் 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி

இட ஒதுக்கீட்டின் மூலம் 313 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்திருக்கின்றனர். நான் கிராமத்தில் படித்து வந்தவன் என்பதால், அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என அறிந்து உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.

சசிகலா சிறையில் இருந்து வெளியில் வருவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆன்லைன் லாட்டரி தடை குறித்து சட்டம் இயற்றியுள்ளோம். அதை மத்திய அரசு நடை முறைபடுத்துவார்கள். அவர்களிடம் முழு அதிகாரம் இருக்கிறது. வடகிழக்கு பருவமழை பாதிப்பை சரி செய்யவும், பருவமழையால் மக்கள் பாதிக்காமல் இருக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

எடப்பாடி பழனிசாமி

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. புதிய கல்வி கொள்கை குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அறிக்கையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட்டை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில். அப்போது தி.மு.க அவர்களுடன் கூட்டணியில் இருந்தனர். அதை யாரும் கேட்காமல் எங்கக் கிட்ட நீட்டு, நீட்டு, நீட்டுனு திருப்பி, திருப்பி கேட்குறீங்க” என்றபோது, நிருபர் ஒருவர், “மத்திய அரசு அவர்களின் கல்வி நிறுவனத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்துள்ளனர். ஆனால், தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 7.5 இட ஒதுக்கீடு கொடுத்ததை பெருமை பேசறீங்க?” என்று கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமி

அதற்கு பதிலளித்த எடப்பாடி, “பெருமை பேசறேன்னு தவறா பேசாதீங்க. நீங்க நிருபர் கேக்கற கேள்விய சரியா கேளுங்க. 7.5 சதவிகிதம் ஒதுக்கீடுனா என்னனு தெரியுமா?. நீட் தேர்வு வரதுக்கு முன்னாடி, எத்தனை பேர் அரசுப் பள்ளில இருந்து சேர்ந்தாங்கனு உங்களுக்கு கணக்கு தெரியுமா?” என்று கேட்டார்.

அதற்கு அந்த நிருபர், “10 சதவிகிதம் கூடுதலாக ஒதுக்கீடு வாங்கியிருக்க முடியும்?” என்று கேட்க முயன்றார். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக, “சும்மா தேவையில்லாம கேள்வி கேக்காதீங்க. பெருமை பேசறோம்னு சொல்லாதீங்க. நான் கிராமத்துல இருந்து வந்தவன்.

எடப்பாடி பழனிசாமி

நான் உண்மையாலுமே பெருமை கொள்றேன். ஏழை மாணவர்களுக்காக நாங்க கஷ்டப்பட்ருக்கோம். என்ன கேள்வி கேக்கறீங்க.. கேள்வி.. ஏழை மாணவர்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க சார்” என்று சொல்லி கிளம்பினார்.



from Latest News

No comments