Breaking News

`வேல் வைத்து பூஜை செய்வதில் என்ன பிரச்னை?’ - பழனி கோயில் நிர்வாகிகளிடம் கொதித்த பா.ஜ.க-வினர்

பா.ஜ.க சார்பில், கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை மேற்கொண்டுவருகிறார். அதன் ஒருபகுதியாக, திண்டுக்கல் மாவட்டம் பழனியில், வேல்யாத்திரை மேற்கொண்ட எல்.முருகன், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனுடன், பழனி முருகன் கோவிலுக்குச் சென்றார். பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனர்.

எல்.முருகன்

அப்போது, எல்.முருகன் கையில் வைத்திருந்த வேலை முருகன் சிலை அருகே வைத்து பூஜை செய்து கொடுக்கும்படி, கட்சி நிர்வாகிகள் கூறினர். அதற்கு அங்கிருந்த பட்டர்கள், `கோயில் நிர்வாகிகளிடன் கேட்க வேண்டும்’ எனக் கூறவே, கோயில் நிர்வாகிகளை அழைத்த பா.ஜ.க-வினர், `வேல் வைத்து பூஜை செய்வதில் என்ன பிரச்னை?’ என கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த கோயில் நிர்வாகி ஒருவர், `அதெல்லாம் வைக்க முடியாதுங்க…’ என ஒற்றைவரியில் முடித்துக்கொண்டு நகர்ந்தார். இதனைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். கோபத்துடன், பா.ஜ.க நிர்வாகிகள் அங்கிருந்து நகர்ந்தனர்.

பழனியில் நடந்த பொதுக்கூட்டம்

Also Read: வேல் யாத்திரை : `ஊருக்கு மட்டும்தான் உபதேசமா முதல்வரே?' - கொதிப்பில் தமிழக பா.ஜ.க!

தொடர்ந்து, பழனியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் முரளிதரன், ``தமிழ் ஒரு வரலாற்று மொழி. அதனாலேயே உலகில் எங்கு சென்றாலும் பிரதமர் மோடி தமிழையும் திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசி வருகிறார். மாநிலத் தலைவர் முருகன் மேற்கொண்டுள்ள யாத்திரை கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தைக் கண்டிக்க மட்டுமல்ல; கொரோனா காலத்தில் முன் களத்தில் நின்று பணியாற்றிய ஒவ்வொரு நபருக்கும் நன்றி தெரிவிக்கவே இந்த யாத்திரை.

தமிழ் கடவுள் முருகனையும் கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்திற்கு உறுதுணையாக இருக்கும் தி.மு.க-வுக்கு, வரும் தேர்தலில் தமிழக மக்கள் தக்கபாடம் புகட்டவேண்டும்” என்று பேசினார். விமானத்திற்கு நேரம் ஆனதால், பொதுக்கூட்டத்தின் பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார் மத்திய அமைச்சர்.

பழனியில் நடந்த பொதுக்கூட்டம்

Also Read: திண்டுக்கல் சிறுமி பாலியல் வழக்கு: `டி.என்.ஏ மாதிரி ஒத்துப்போகிறது’ - தமிழக அரசு மேல்முறையீடு

எல்.முருகன் பேசும்போது, ``கொரோனா காலத்தில் களத்திற்கு வராத தி.மு.க தலைவர் ஸ்டாலின், தற்போது ஒரு கனவு கண்டு வருகிறார். அவரது கனவு கனவாகவே போகும். உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்சினை குறித்து பேசும் கனிமொழி இன்று தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் தற்போதைய எம்.எல்.ஏ பூங்கோதை தி.மு.க-வினரின் காலில் விழும்போது எங்கு சென்றார். 2ஜி வழக்கு தினமும் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தவருவதை மக்களிடம் இருந்து மறைப்பதற்காகவே தினந்தோறும் ஏதாவது ஒன்றை பேசி தி.மு.க திசை திருப்புகிறது. கந்தசஷ்டி கவசத்தையும், இந்துமதக் கடவுள்களையும் இழிவுபடுத்தும் கருப்பர் கூட்டத்தையும், அவர்களுக்கு உறுதைணையாக இருந்த கயவர் கூட்டத்தையும் தமிழகத்தின் காவிக்கூட்டம்தான் விரட்டும்” என்று பேசினார்.

முன்னதாக, வேல் யாத்திரையின் போது பேசிய பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை, ``பழனி சட்டமன்றத் தொகுதியை நிச்சயம் எங்களுக்குக் கொடுக்க வேண்டும். அதுவே எங்கள் அன்பான வேண்டுகோள்” என்றார். அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உறுதியான நிலையில், அண்ணாமலையின் பேச்சு தொகுதிப் பங்கீட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



from Latest News

No comments