Breaking News

`போலீஸார் லஞ்சம் வாங்குவது போன்றவையும் மனநலப் பிரச்னைகளின் வெளிப்பாடே!’ - உயர் நீதிமன்றம்

பொதுவாக மனநலம் சார்ந்த பிரச்னைகள் ஒரு நோயாக கருதப்படாமல் பலரும் சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. தங்களை மனநோயாளிகள் என கருதி விடுவார்களோ என்ற அச்சத்தாலும் சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. இப்படி பல வழிகளில் மனநலம் சார்ந்த பிரச்னைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இந்நிலையில், காவல்துறையினர் வன்முறை மனோபாவத்துடன் நடந்து கொள்வது, லஞ்சம் வாங்குவது போன்றவையும் மனநல பிரச்னைகளின் வெளிப்பாடே என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மனநலம் சார்ந்த பிரச்னைகள்

மதுரையை சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அளித்த பொதுநல மனுவில்,``சென்னை மனநல அமைப்பு மட்டுமே சிறைவாசிகளுக்கு மனநலச் சிகிச்சை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது. இதனைப் பின்பற்றும் விதமாக திருச்சி மத்திய சிறை அல்லது மதுரை மத்திய சிறையில் மனநல சிகிச்சை வழங்கும் சிறப்பு மருத்துவ வசதி ஏற்படுத்தக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மதுரை அல்லது திருச்சி மத்திய சிறையில் மனநல ஆலோசகர், மனநல சிகிச்சையில் பயிற்சி பெற்ற சமூக ஆர்வலர், செவிலியர், மருந்தாளுநர் ஆகியோரைக் கொண்ட சிறப்பு மனநல சிகிச்சை அமைப்பை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

Also Read: `இனவெறி போராட்டம் என்ற பெயரில் வன்முறை’ - சுதந்திரதின உரையில் ட்ரம்ப் ஆவேசம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, "இன்றைய சூழலில் குறிப்பாக கொரோனா ஊரடங்குக்குப் பின்னர் பெரும்பாலானவர்கள் மனநல பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளனர். காவல்துறையினர் வன்முறை மனோபாவத்துடன் நடந்து கொள்வது, லஞ்சம் வாங்குவது போன்றவையும் மனநல பிரச்னைகளின் வெளிப்பாடே. குடும்பத்தினருடன் நேரம் செலவிட, தூங்க வாய்ப்பு கிடைக்காததன் வெளிப்பாடுதான் இவை. கொரோனா ஊரடங்குக்குப் பிந்தைய நிலையில், அனைவருமே மனநல பிரச்சனைகளோடே உள்ளனர். குடும்பப் பிரச்னைகள் எழவும் இவையே காரணம். மனநல மருத்துவர்களே அதிகம் தேவை" எனத் தெரிவித்தனர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

அரசுத்தரப்பில், ``தமிழக சிறைகளில் இருப்போரின் தேவைக்காக மனநல சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் சிலவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென்பதால், வழக்கை நவம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.



from Latest News

No comments