Breaking News

வாழ்க்கை `ரகசியம்' சொன்ன ஹர்ஷிதா... புதிய சிக்கலில் அபி?! #VallamaiTharayo

கெளசல்யாவின் குழந்தைகளுக்கும் அபியின் குழந்தைகளுக்கும் சரிவராததால், அபியின் குழந்தைகள் ஹர்ஷிதா மகனுடன் விளையாடுகிறார்கள். குழந்தைகளைத் தேடி வரும் அபியிடம், ``என் மகன் உங்ககூட நல்லா பழகுறான். எனக்கு ஹேப்பியா இருக்கு. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. அப்புறம் எப்படி இவ்வளவு சக்ஸஸ்ஃபுல்லா இருக்கேன்னு கேட்குறீங்களா? நான் எவ்வளவோ பிலாசபிகல் புக்ஸ் படிச்சேன். எதுவும் என் தேடலுக்கு விடை தரல. கடைசியில் `தி சீக்ரட்' என்ற புக் படிச்சுதான் எனக்குள் பாஸிட்டிவிட்டியை வளர்த்துக்கிட்டேன். நீங்களும் படிங்க” என்கிறாள் ஹர்ஷிதா.

Vallamai Tharayo

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களால் நிம்மதியாகவோ வெற்றிகரமாகவோ வாழ முடியாது என்பதுபோல இந்த வசனம் பேசப்பட்டிருக்கிறது. நம்பிக்கை என்பது அவரவர் விருப்பத்துக்கு உட்பட்ட விஷயம்தானே? கடவுள் நம்பிக்கை இல்லாமலே பல கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு சிறந்த வாழ்க்கை வாய்க்கவில்லையா? நம்பிக்கையோடு இருப்பவர்களிலும் சிரமப்படுகிறவர்கள் இல்லையா?

எனி ஹவ், 'பிக்பாஸ்' கமல் போல ஹர்ஷிதா பரிந்துரைத்த `தி சீக்ரட்' மிகவும் முக்கியமான புத்தகம். இது யூடியூப் வீடியோவாகவும் வந்திருக்கிறது.

இந்த விஷயத்தில் ஹர்ஷிதாவால் இம்ப்ரஸ் ஆன அபி, அதை அவளிடமும் தெரிவிக்கிறாள்.

கெளசல்யா தம்பியிடம் அபியைப் பற்றியும் அவள் குடும்பத்தைப் பற்றியும் மோசமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். ஏற்கெனவே ஏழரையாக இருக்கும் சித்தார்த், இனி என்ன செய்வானோ? அபி அங்கே வர, சட்டென்று ரெமோவாக மாறி, பாசத்தைப் பொழிகிறார் அக்கா. சித்தார்த்துக்கே இது அதிர்ச்சியாக இருந்திருக்கக்கூடும்!

Vallamai Tharayo

குடும்பத்தோடு ஒருவர் வீட்டில் வந்து உரிமையோடு தங்குபவர்கள், அந்த வீட்டுப் பெண்ணின் வேலைகளைப் பகிர்ந்துகொண்டால்தான் சந்தோஷமாக இருக்க முடியும். ஆனால், ரெஸ்ட் எடுக்க வந்தவர்கள் போல அந்த வீட்டுப் பெண்களை வேலை வாங்கிக்கொண்டே இருந்தால், உறவு கெட்டுப் போகாமல் என்ன செய்யும்?

அனு வாங்கிக் கொடுத்த பேண்ட்டைக் கையில் வைத்துக்கொண்டு, விசாரணையை ஆரம்பிக்கிறார் கெளசல்யா. கோபத்தில் இருக்கும் சித்தார்த்திடம், அனு வந்ததையும் உடனே சென்றுவிட்டதையும் சொல்கிறாள் அபி. அவன் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

அபிக்கு முன் ஜாக்கிரதை உணர்வே இல்லையோ? இப்படி ஒரு பேன்ட்டைக்கூட பத்திரமாக வைக்கத் தெரியாமல் மாட்டிக்கொள்வாளோ?

மறுநாள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பெரியப்பாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் போவதாகச் சொல்கிறாள் அபி. உடனே கெளசல்யா, சித்தார்த்தை அழைத்துக்கொண்டு ஊர் சுற்றிப் பார்க்கத் திட்டமிடுகிறார்.

மருத்துவமனைக்கு வராத சித்தார்த், அக்காவுடன் செல்வான் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. வேறு என்ன நடக்கப் போகிறது?

திங்கள் இரவு 7 மணிக்குப் பார்ப்போம்!

- எஸ்.சங்கீதா


from Latest News

No comments