Breaking News

`ஆதாரம் இல்லை... ஆனால் கைது செய்வோம்!’ - காமெடியன் முனாவர் வழக்கு சர்ச்சையில் ம.பி போலீஸ்

மும்பையைச் சேர்ந்த ஸ்டேண்ட்அப் (Stand-up) காமெடியன் முனாவர் ஃபரூக்கி (Munawar Faruqui). முனாவர் பாய் என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்படும் இவர், தனிநபர், மதம் சார்ந்து பலரது உணர்வுகளைப் புண்படுத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந்நிலையில், இந்தூர் பாஜக எம்.எல்.ஏ மாலினி கவுரின் (Malini Gaur) மகன் ஏகலவ்யா சிங் (Eklavya Singh), `முனாவர், இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி மத உணர்வுகளைப் புண்படுத்தினர். உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் பரூக்கி அவமதித்தார்' என்று புகார் இந்தூர் போலீஸில் அளித்தார். அதன் அடிப்படையில் முனாவர் ஃபரூக்கி உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஜாமீன் கோரிய ஃபரூக்கியின், கோரிக்கையை இரண்டு கீழமை நீதிமன்றங்கள் நிராகரித்தன. அதையடுத்து, முனாவர் தாக்கல் செய்த மனு மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் ஜனவரி 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தூர் காவல்துறை வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியது. காவல்துறை தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது.

முனாவர் ஃபரூக்கி

முனாவர் ஃபரூக்கி மீதான வழக்கு, கருத்து சுதந்திரத்துக்குத் தடை போடுவதாகச் சர்ச்சை எழுந்தது. ஜனவரி 5-ம் தேதி ஃபரூக்கி ஜாமீன் கோரியதை நிராகரித்த கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், முனாவருக்கும் அவரது நண்பர் நலினும் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், இந்து கடவுள்கள், தெய்வங்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை, பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் தெரிவித்ததாகவும் குற்றம்சாட்டப்படுவதாகத் தெரிவித்தது.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு சமூகத்தில் பதற்றமான சூழலை ஏற்படுத்த முயற்சிப்பதாகும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவது சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட முனாவர், நலின் ஆகியோருக்கு ஜாமீன் வழங்குவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

முனாவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 295 ஏ (மத உணர்வுகளைப் புண்படுத்துதல்) மற்றும் 269 (சட்டவிரோதமாக அல்லது கவனக்குறைவாகச் செயல்படுவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து துகோகஞ்ச் (Tukoganj) காவல் நிலைய ஆய்வாளர் கமலேஷ் சர்மா கூறுகையில், முனாவருக்கு எதிராக காவல்துறையிடம் எந்த ஆதாரமும் இல்லை என்றும், அவர் ஒரு நிகழ்ச்சி அமைப்பாளர் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றும் ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும், இந்து தெய்வங்கள், மத்திய அமைச்சர் அமித் ஷாவை அவமதித்ததற்கான எந்தவித ஆதாரமும் இதுவரை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

முனாவர் ஃபரூக்கி

`முனாவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்று அவருக்கு ஜாமீன் மறுத்த நீதிமன்றம் போலீஸாரிடம் கேட்கவில்லை. கைது செய்து 2 நாள்கள் சிறையில் அடைத்த போலீஸார், பின்னர் அவர் அமித் ஷாவை அவமதித்ததாகவோ, இந்து தெய்வங்களுக்கு எதிராகவோ அவதூறு கருத்துகளைக் கூறியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறுகின்றனர். அப்படியென்றால் அவர் எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின்னர் போலீஸார் ஆதாரங்களைத் தேடுகிறார்கள்’ என முனாவரின் ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

இந்தூர் காவல்துறை உயரதிகாரி விஜய் காத்ரி `ஆர்ட்டிகல் 14’ இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், ``முனாவர் ஃபரூக்கியும், ஐந்து நண்பர்களும், சிறையில் அடைக்கப்பட வேண்டிய தேவையில்லை. அவர்கள் இந்து மதத்தைப் பகடி செய்யும் வகையில் எதுவும் கூறவில்லை. நிகழ்ச்சிக்கான ஒத்திகையை வைத்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. காவல்துறையினரிடம் வாய்மொழி ஆதாரங்களே இருக்கின்றன. வேறு எந்த ஒரு ஆதாரமும் இல்லை" என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆதாரம் இல்லை என போலீஸாரே ஒப்புக்கொண்டிருக்கும்போது முனாவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் மற்றும் நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபரூக்கி ஆகியோருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பி.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

ப.சிதம்பரம்

இது குறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், `பத்திரிகையாளர் சித்திக் கப்பன் மற்றும் நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபரூக்கி ஆகியோருக்கு ஜாமீன் கொடுக்க நீதிமன்றங்கள் ஏன் மறுக்கின்றன? சமத்துவம் என்பது அனைவரையும் சமமாக அணுகுவது, அனைவருக்கும் சமமான நீதி என்பதே’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும், `இதேபோன்ற ஒரு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் சந்திரசூட் ஆகியோரின் முன்மாதிரித் தீர்ப்பு இருந்தபோதிலும், ஒவ்வொரு வழக்கிலும், `ஜாமீன் என்பது விதி, சிறைதான் விதிவிலக்கு’ என்ற கொள்கை ஏன் பயன்படுத்தப்படவில்லை?’ என்றும் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

முனாவர் ஃபரூக்கி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றாலும் அவர்களுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து வருகிறது. நகைச்சுவை நடிகர்கள் பலரும் முனாவருக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.



from Latest News

No comments