`அ.தி.மு.க-வில் சசிகலாதான் கிங் மேக்கர்!’- போஸ்டரால் நீக்கப்பட்ட நெல்லை நிர்வாகி சுப்ரமணிய ராஜா
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் நீதிமன்றத்தால் சிறைதண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, நான்காண்டுகால தண்டனையை முடிந்து இன்று விடுவிக்கப்பட்டார். கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, அவர் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பவுள்ளார்.
சசிகலா விடுதலையாகி இருப்பதை அ.ம.மு.க-வினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். நெல்லை மகாராஜநகர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர், சசிகலா குணமடைந்து எந்தப் பிரச்னையும் இல்லாமல் விடுதலையாகி வர வேண்டும் என்பதற்காக கடந்த வாரம் பாதயாத்திரையாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அவர் இன்று சசிகலா விடுதலை குறித்த தகவல் வந்ததும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்.
அ.ம.மு.க-வினர் ஒரு பக்கம் சசிகலா வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழலில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த தொண்டர்களிடமும் அவரது வருகை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதாவின் உற்ற தோழியாக இருந்த சசிகலாவின் வருகையைத் தொண்டர்கள் உற்சாகத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க நிர்வாகியான சுப்பிரமணிய ராஜா என்பவரும் சசிகலா வருகையை வரவேற்று போஸ்டர்களை ஒட்டி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். நெல்லை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் பொறுப்பு வகித்த அவர், `அ.இ.அ.தி.மு.க-வை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களே வருக!’ என போஸ்டர் ஒட்டியுள்ளார்.
நெல்லை மாநகரம் முழுவதும் சுப்பிரமணிய ராஜா ஒட்டியுள்ள போஸ்டர்கள் சர்ச்சையைக் கிளப்பின. குறிப்பாக அ.தி.மு.க தொண்டர்கள் பலரும் அவரைத் தொடர்புகொண்டு போஸ்டர் பற்றி விசாரித்து வந்தார்கள். சசிகலாவை வரவேற்று அவர் போஸ்டர் ஒட்டியதால் கட்சி மேலிடம் அவரை அ.தி.மு.க-வில் இருந்து நீக்கியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலும் இருந்தும் சுப்ரமணிய ராஜா நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட சுப்பிரமணிய ராஜாவிடம் பேசியபோது, ``அ.தி.மு.க-வின் கடைக்கோடி தொண்டன் நான். அம்மா மீது பற்றும் பாசமும் கொண்டிருந்தவன். சிறையில் இருந்து சின்னம்மா சசிகலா வருவதை வரவேற்க வேண்டியது அம்மாவின் தொண்டர்களின் கடமை. அதையே நான் செய்தேன்.
இன்று நான் சின்னம்மா சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியிருக்கிறேன். என்னைப் போலவே அ.தி.மு.க-வின் லட்சோபலட்சம் தொண்டர்கள் அவரை வரவேற்று போஸ்டர்களை ஒட்டிவிடுவார்கள் என்ற பயத்தில் என்னைக் கட்சியில் இருந்து நீக்கியிருக்கியிருக்கிறார்கள். அம்மா ஜெயலலிதா, சின்னம்மா சசிகலா மீது கொண்ட மரியாதைக்கு இது தான் பரிசு என்றால் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
என்னைக் கட்சியை விட்டு நீக்கியதால் சின்னம்மா சசிகலாவின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தி விட முடியாது. நாளையே அவர் தமிழகத்துக்கு வரும்போது, அம்மாவின் சமாதியில் உட்கார்ந்தால் அமைச்சர்கள், எம்.பி-கள், எம்.எல்.ஏ-கள் என முக்கிய நிர்வாகிகள் எல்லோருமே அவரைப் பார்க்கப் போய்விடுவார்கள்.
சின்னம்மாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியதற்காக என்னைக் கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். ஆனால், சில நாள்களுக்கு முன்புகூட அமைச்சர்களும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் சின்னம்மா சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசினார்களே... அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
from Latest News
No comments