`பட்டாசுக்குத் தடை கோருபவர்கள் அலுவலகத்துக்கு நடந்து செல்லவேண்டும்!' - கங்கனா ரணாவத்
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சில மாநிலங்கள் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கத் தடை விதித்திருக்கிறது. அந்த மாநிலங்கள் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யவேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அதனால், தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்ற வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
Also Read: ``எனது கருத்தை சினிமா மூலம் கொண்டு செல்வேன்!” - ட்விட்டர் கணக்கு முடக்கம் குறித்து கங்கனா
சத்குருவின் வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் கங்கனா, ``சுற்றுச்சூழலைப் பாதுகாக்கச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சில நாள்கள் காரை பயன்படுத்தாமல் தங்கள் அலுவலகத்துக்கு நடந்து செல்லவேண்டும். சத்குரு பல மாதங்களுக்கு முன்பே, தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அதற்காக, சிறிது பட்டாசுகளையும் அவர் சேமித்து வைத்திருந்தார். கோடிக்கணக்கான மரங்கள் நடப்படுவதற்குக் காரணமாக இருந்த அவரே, தீபாவளிக்குப் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார். எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பட்டாசுகளைத் தடை செய்யவேண்டும் என்று சொல்பவர்கள் 3 நாள்களுக்கு கார்களை பயன்படுத்தாமல் அலுவலகத்துக்கு நடந்து செல்லவேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். நடிகை கங்கனாவின் இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஏராளமானோர் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
from Latest News
No comments