`இது நவீன தீண்டாமை... தமிழக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்!’ - எல்.முருகன்
``தமிழக முதலமைச்சர் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்காதது கண்டனத்துக்குரியது. இதை நவீன தீண்டாமையாக பார்க்கிறேன்" என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலிள்ள 12 ஜோதிர்லிங்க ஆலயங்களில் பாஜக நிர்வாகிகளால் உலக மக்கள் ஒற்றுமைக்காக இன்று சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. அதற்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெறும் பூஜையிலும், கேதர்நாத் ஆலயத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் சிறப்பு பூஜையின் காணொளி ஒளிபரப்பும் நிகழ்ச்சியிலும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிறப்பு பூஜை நிகழ்ச்சிகள் முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ``முதல்வர் மு.க.ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்காது கண்டனத்துக்குரியது. இதை நவீன தீண்டாமையாக பார்க்கிறேன்.
ராமேஸ்வரம் புண்ணிய தலம். இந்த இடத்திலிருந்து சொல்கிறேன், நேற்று இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் இருக்கிற இந்துக்கள், தமிழர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதற்காக தீபாவளியை கொண்டாடுகிறோம்.
Also Read: `பாஜக-வில் இணைய வேண்டும் என்பது சிறுவயது கனவு!' - சொந்த ஊரில் நெகிழ்ந்த எல்.முருகன்
ஒவ்வொரு தமிழரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட திருவிழாவுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்காதது மிகவும் வன்மையாக கண்டிக்கதக்கது. இது ஓரவஞ்சனை ஆகும்.
ஒரு மதத்தை சார்ந்தவர்களுக்கு வாழ்த்து சொல்வது, பெரும்பான்மையான இந்து சமுதாயத்தில் இருக்கின்ற தமிழர்கள் கொண்டாடுகின்ற திருவிழாவுக்கு வாழ்த்து சொல்லாமல் புறக்கணிப்பதை நவீன தீண்டாமையை பார்க்கின்றேன். இதற்கு ஸ்டாலின் தாமாக முன்வந்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
அதைத்தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதி மீனவர் சங்க பிரதிநிதி ஒருவர் டீசல் விலை குறித்து பேசிய போது, எல்.முருகன் ``மோடி, 10 ரூபாய் குறைத்திருக்கிறார். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவியுங்கள். தமிழக அரசை குறை கூறுங்கள்'' என்று மீனவர் சங்கத்தினரிடம் வலியுறுத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
from Latest News
No comments