Breaking News

புதிய சிந்தனை, புதிய தலைமுறை - மாற்றங்களை விதைக்கும் விஜய் பிரவின் மஹராஜன் | இவர்கள் | பகுதி 19

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! - ஆசிரியர்.

தகவல் தொழில்நுட்பத் துறை கடந்த பத்து ஆண்டுகளில் சந்தித்துள்ள அசுர வேக வளர்ச்சியின் முக்கிய கிளைத் துறையாக தரவு அறிவியல் உருவெடுத்துள்ளது. தகவல்களிலிருந்து பெறப்படும் தரவுகள் இன்று மனிதனின் அடையாளங்களாக மாறியிருப்பதை நம்மால் உணர முடியும். ஒரு பொழுதுபோக்கு செயலியில் நம்மைப் பற்றி நாம் பதியும் தகவல்களே மிகப்பெரிய வணிக இயந்திரங்களின் கச்சாப்பொருளாக அமைகிறதென்பது நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும். தரவுகள் கொண்டு எங்கள் வாடிக்கையாளர்களை எங்களால் துல்லியமாக கணித்து விட முடிகிறது என்கிறார் இந்தியாவில் தனது வணிக நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தும் தொழிலதிபர் ஒருவர். தரவுகளை மூலதனமாகக் கொண்டுதான் பல புகழ்பெற்ற நிறுவனங்கள் இயங்குகின்றன. தரவுகளும் அவற்றை ஆய்ந்தறிந்து பெறும் தகவல்களும் பங்குச் சந்தை நிலவரம் முதல் பலசரக்கு பொருள் வியாபாரம் வரை அனைத்துத் தரப்பு வணிக செயல்பாடுகளிலும் இன்றியமையாததாகியிருக்கின்றன.

விஜய் பிரவின் மஹராஜன் | இவர்கள்

உலக அரங்கில் தரவு ஆய்வறிவியல் துறையில் முன்னோடியாகத் திகழ்பவர் விஜய் பிரவின் மஹராஜன். Blockchain என்னும் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் கொண்டு, பாதுகாப்பான NFT வர்த்தக சேவை வழங்கும் bitsCrunch நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இவர். சங்கரன்கோவில் பகுதியை பூர்வீகமாக கொண்ட ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை காவல்துறையில் பணியாற்றினார். தாயார் பள்ளி ஆசிரியர். குழந்தைப் பருவந்தொட்டே கல்வியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த விஜ்ய பிரவீன், அனைத்தையும் ஆழ்ந்தறிந்து கற்கும் தேடல் குணத்தை இயல்பிலேயே பெற்றிருந்தார். மின் பொறியியல் பட்டதாரியான விஜய், ஜெர்மனியின் முனிச் டெக்னிக்கல் யுனிவர்சிட்டியில் மேற்படிப்பைத் தொடர்ந்த பொழுதுதான் தரவு ஆய்வுத்துறைப் பற்றிய அறிமுகம் அவருக்குக் கிடைத்ததாகக் கூறுகிறார்.

கல்வியைத் தொடர்ந்தபடியே தனது தாய்நிறுவனத்தில் தரவு ஆய்வுத்துறையில சிற்சில பயிற்சிமுறை ஆய்வுகள் செய்து வந்துள்ளார் விஜய். அவ்வனுபவங்கள் அவருக்கு துறைமாற்றம் மேற்கொள்ளும் துணிச்சலைத் தந்தன. 2013 ஆம் ஆண்டில் துவங்கிய அவரின் தரவு ஆய்வுத்துறை பயணம் இன்று பன்மடங்கு பரிமளித்திருப்பதற்கு தனது விடாமுயற்சியும், பொறுமையும், தொடர்ந்த கற்றலுமே காரணம் என்கிறார் விஜய். TEDx அமைப்பில் பங்குபெற்று உரையாற்றிய பெருமை பெற்ற விஜய் பிரவீன் அவர்கள், சிறு விஷயங்களில் செலுத்தும் கவனம் நமது வாழ்விலும் சமூகத்திலும் பெரியளவில் மாற்றங்கள் ஏற்படுத்த வல்லவை என்னும் கருத்தை நிறுவியே அவரின் உரையைக் கட்டமைத்திருந்தார். தரவு ஆய்வு அறிவியல் சாமானியனுக்கும் பயன்படுமளவில் திட்டங்கள் வகுத்து செயல்படுத்த வேண்டுமென்பதே அவரது இலக்கென கூறுகிறார் விஜய்.

விஜய் பிரவின் மஹராஜன் | இவர்கள்

தரவு மேலாண்மை, தரவு ஆய்வு போன்ற கடினமான பதங்களுக்கு மிக எளிமையான விளக்கத்தை அவர் அளிக்கிறார்.

"தரவு மேலாண்மை நமக்கு ஒன்றும் புதிதல்ல, அணணாச்சி கடை முறைதான் தரவு ஆய்வு என்பது. தன்னிடம் இருப்பு எவ்வளவு இருக்கிறது, வரவு எவ்வளவு எதிர்பார்க்கப்படுகிறது, செலவு எவ்வளவு கணக்கிடப்படுகிறது போன்ற தகவ்லகளை தனது காகித நோட்டில் குறிப்பெடுத்துக் கொள்ளும் அண்ணாச்சி கடை முறையே இன்று தரவு ஆய்வு அறிவியல் (Data Analytics Science) என்று புத்தம் புது பொலிவான பெயருடன் உலக அரங்கையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது."

அதனால் இளைஞர்கள் எவ்வித அச்சமுமின்றி இத்துறையில் காலூன்றலாம் என்று பரவசமாக கூறுகிறார் விஜய்.

சமூக ஊடகங்களை வெறும் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தாமல் அவற்றின் மூலம் தனது ஆர்வங்கள், தேடல் சார்ந்த நெட்வொர்க் அமைத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்கிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை இப்பொழுது இல்லை. சுயவிவர கோப்புகளை எடுத்துக் கொண்டு அலுவலகங்களின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. உழைப்பும், திறமையும், துறைசார்ந்த அறிவும் அவற்றுடன் சமூக ஊடங்களில் தெளிவான நெட்வொர்க் அமைத்துக் கொண்டால் போதும் வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. தொடர்ந்த ஈடுபாட்டையும், திறன் வெளிப்படுத்தும் முயற்சிகளையும் தொடர்ந்து வெளிபடுத்திக் கொண்டிருந்தால் போதும் வல்லுநர்களின் பார்வை நம்மீது திரும்பும் தருணங்கள் எளிதில் அமையுமென்கிறார் விஜய். திறமைகளை கண்டறியும் உத்தியாக சமூக ஊடகங்களையே பெரிய நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன என்னும் கூடுதல் தகவலையும் அவர் தருகிறார்.

தரவு ஆய்வு அறிவியல் துறை அடுத்தத் தலைமுறைக்கான தொழில்நுட்பம். எந்தவொரு புது சிந்தனைக்கும் துவக்கத்தில் வரவேற்பு குறைவாகவே இருக்கும். அதற்கு காரணம் அதனைக் குறித்த தெளிவின்மை மற்றும் செயல்முறை சிக்கல்கள். இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் தகவல் தொழில்நுட்பத்துறையில் கோலோச்சி நிற்கப் போவது தரவு அறிவியல் துறைதான் என்பதை அறுதியிட்டுக் கூறும் திரு.விஜய் பிரவீன் தரவு ஆய்வுகள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் Blockchain technology கொண்டு Cryptocurrency, NFT பயன்பாட்டு முறைகளை விளக்குகிறார். Non Fungible Token எனப்படும் தனித்தன்மைப் பொருந்திய, மாற்றில்லாத, மறைநாணய முதலீடு இப்பொழுது புதிய வர்த்தகமாக உருவெடுத்திருக்கின்றது. எலான் மஸ்க், அமிதாப் பச்சன், கமலஹாசன் போன்ற பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும்,தொழிலதிபர்களும் தங்களது தனித்துவ அடையாளச் சின்னங்களை NFT யாக மாற்றி வர்த்தகம் செய்யும் பொருட்டு களமிறங்கியிருக்கின்றனர்.

விஜய் பிரவின் மஹராஜன் | இவர்கள்

வர்த்தகம் தகவல்களின் அடிப்படையில் இயங்குகின்றது. எளிதாக, உடனுக்குடன் கிடைக்கப்பெறும் துல்லியமான தகவல்கள் அவ்வர்த்தகம் சிறப்புற செயல்பட உதவுகிறது. Blockchain தொழில்நுட்பம் அதை வர்த்தகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சாத்தியப்படுத்தித் தருகின்றது. ஒருமுறை blockchain நெட்வொர்க்கில் ஒருவர் பதிவு செய்து இணைந்து விட்டால் அதற்குப்பிறகு அவரைப்பற்றிய ஒவ்வொரு தரவும் தகவலாக சேகரிக்கப்பட்டுவிடும். Continuous data, Discreet data என்ற இருவகை தரவுகளும் சேகரிக்கப்படும் blockchain தொழில்நுட்பத்தின் வெளிப்படைத்தன்மையே அதன் சாதகம் பாதகம் இரண்டுமே எனலாம். blockchain நெட்வொர்க்கில் பதியப்படும் தரவுகள் அழிக்கமுடியாத நிரந்தரத்தன்மை பெற்றுவிடுகின்றன. நீங்களே அழிக்க முயன்றாலும் அது சாத்தியமற்று போய்விடுகிறது. பணபரிவர்த்தனைகள், கணக்கு வைப்பு தகவல்கள் என அனைத்துமே எந்தத் இடைத்தரகரின் தலையீடுமின்றி உண்மையுருவில் தனிமனித பயன்பாட்டிற்கு ஏதுவாக இருப்பதே blockchain நுட்பத்தின் சாராம்சம். அரசாங்கங்களே இப்பொழுது இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றன. Microsoft, Google, Amazon, போன்ற பெருமுதலாளிகள் இப்பொழுது இத்தொழில்நுட்பத்தில்தான் பெருமுதலீடுகள் செய்து ஆய்வு செய்து வருகின்றன. அதே தொழில்நுட்பம் கொண்டு தனது startup நிறுவனமான bitsCrunch ஐ துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் திரு விஜய் பிரவீன்.

தனது நிறுவனத்தில் பணியாற்றும் வல்லுநர்களைப் பற்றிப் பேசும்பொழுது அவரது குரலில் ஆர்வம் மேலிடுகிறது. தகவல்களை ஆழந்தறியும் திறனுடையவர்களுக்கே முதலுரிமை வழங்கப்படுவதாகக் கூறும் அவர், பெண்களே அதற்கு சிறந்த தேர்வென்கிறார். தொழில்நுட்பக் கல்வியில் தேர்ச்சிப் பெற்ற பெண்கள் குடும்பச்சூழல் காரணமாக career break எடுக்க நேரிட்டு மீண்டும் பணிக்கு திரும்ப விரும்பவர்களை முன்னுரிமைக் கொடுத்து தேர்வு செய்வதாக திரு விஜய் கூறுகிறார். விட்டதைப் பிடிக்கும் ஆர்வமும், தங்களது தொழிற்முறை வல்லமையை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக இதனை பெண்கள் அணுகுவதால் அவர்களது ஈடுபாடும் உழைப்பும் பன்மடங்கு அதிகரிப்பதாகக் கூறுகிறார்.

தரவு அறிவியல் விஞ்ஞானியாக மட்டுமல்லாது, சிறந்த பேச்சாளராகவும், இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கும் சாதனையாளராகவும் திகழும் விஜய் பிரவீன் தான் கடந்து வந்த பாதையை மற்றவர்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கு சிறிதும் தயங்குவதில்லை. தொழில்நுட்ப அறிவும், விடாமுயற்சியும் எவ்வளவு அவசியமோ அதேபோல் softskills எனப்படும் உரையாடல் திறன், குழுவில் இயங்குதல், நட்புறவு பேணுதல் ஆகியவற்றை வளர்த்துக்கொள்வதும் மிகவும் அவசியம். Mark Zuckerberg, Elon Musk, Jeff Bezos போன்றோரின் ஆளுமைத்திறன்களை கூர்ந்து கவனிக்க வேண்டியதன் அவசியத்தை விஜய் பிரவீன் தனது உரையாடல்கள் மூலம் உணர்த்துகிறார்.

விஜய் பிரவின் மஹராஜன் | இவர்கள்

செயற்கை நுண்ணறிவுத்திறன் (AI) தொழில்நுட்பத்தின் நோக்கம் மனித இனத்தின் மேம்பாடு, காலநிலை மாற்றம், சூழலியல் அமைப்பு போன்ற அறிவுசார் மற்றும் பொருளீட்டும் உத்திகளை எளிமையாக்கித் தருவதுதான் என்றாலும் அவற்றின் மறுபக்கத்தையும் நாம் கவனிக்கத் தவறிவிட கூடாது. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது AI தொழில்நுட்பத்தின் கூறுகளுக்கும் பொருந்தும். கடந்த டிசம்பர் மாதம் பெங்களூருவில் நடந்த மிகப்பெரிய bitcoin மோசடியில் பல கோடிகளை தனியொரு மனிதர் இதே தொழில்நுட்பம் கொண்டு செய்திருக்கிறார் என்பதே இதற்கு சான்று. அதன் காரணமாகவே சீனா bitcoin அச்சிடுவதற்கு தடை விதித்துள்ளது. இவ்வர்த்தகத்தின் மூலம் ஓவர் நைட்டில் ஒபாமா ஆனவர்களும் இருக்கிறார்கள், அதேசமயம் பலகோடிகளை ஒரு சொடுக்கில் இழந்தவர்களும் இருக்கிறார்கள் என்று வெளிப்படையாக பேசும் விஜய் பிரவீன் மஹராஜன், தொழில்நுட்ப அறிவென்பது ஜாடிக்குள் அடைபட்டிருக்கும் அற்புத பூதம் போன்றது. அதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதும் அழிவிற்கு பயன்படுத்துவதும் அனைத்தும் தனியொரு மனிதனின் தேர்வாக இருக்கும் பட்சத்தில் கடிவாளம் இன்னும் நம் கையிலிருக்கிறதென்று பொருள்.

விஜய் பிரவீன் மஹராஜன் bitsCrunch நிறுவனம் மூலம் அனைத்துத்தரப்பு மக்களும் பயன்படும் வகையில் வர்த்தக சேவை அளிப்பதை தமது நோக்கமாகக் கருதுவதாகக் கூறும்பொழுது அவரையும் அவரைப்போன்ற தொழில்நுட்ப வல்லுநர்களின் வாக்குறுதிகளின் மீது நம்பிக்கைக் கூடுவதை உணர முடிகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகள் இத்தொழில்நுட்பத்தின் சிறந்த சந்தைகளாக பார்க்கப்படுகின்றன. The rich get richer and the poor get poorer in third world countries என்ற நிதர்சனத்தை மாற்றியமைத்து அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வழிவகைகள் செய்யும் தொழில்நுட்ப வளர்ச்சியே நாளைய தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லும் வருங்காலத்திற்கான நம்பிக்கையாகும். திரு.விஜய் பிரவீன் போன்றோர் அதை சாத்தியப்படுத்தித் தருவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நம்பிக்கையை விதைப்பவர்கள் நம்பிக்கையை அறுவடை செய்வர் என்பது காலம் உணர்த்தும் உண்மை.

(இவர்கள்... வருவார்கள்)

Also Read: `கலை மட்டும்தான் நிரந்தரம்’ - பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் | இவர்கள் | பகுதி 18



from Latest News

No comments